சொந்த செலவில் கால்வாய் வெட்டிய மாற்றுத் திறன் விவசாயி!

விழுப்புரம் அருகே தூர்ந்து கிடந்த கால்வாயை சொந்தச் செலவில்ஆழப்படுத்தியும், புதிதாகக் கால்வாய் வெட்டியும்
சொந்த செலவில் கால்வாய் வெட்டிய மாற்றுத் திறன் விவசாயி!

விழுப்புரம் அருகே தூர்ந்து கிடந்த கால்வாயை சொந்தச் செலவில்ஆழப்படுத்தியும், புதிதாகக் கால்வாய் வெட்டியும் தென்பெண்ணை ஆற்று நீரை மலட்டாறில் திருப்பி விட்டுள்ளார் இந்தப் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறன் விவசாயி.

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம், கடலூர் மாவட்டம் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. போதிய மழையின்மையால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்பெண்ணை ஆறு வறண்டு விட்டது.

விழுப்புரம் அருகேயுள்ள தளவானூர்-சித்தாத்தூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து மலட்டாறு கிளை பிரிந்து செல்கிறது. இந்த மலட்டாறும் கடலூர், புதுவை மாநிலத்தையொட்டிச் செல்வதால், ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் ஆதராமாகவும், பாசன வசதியையும் வழங்கி வந்தது.

தென்பெண்ணை ஆற்றில் முழு அளவில் தண்ணீர் செல்லும் போது, மேடான பகுதியில் உள்ள இந்த மலட்டாறு வழியாக தண்ணீர் செல்வது வழக்கம். ஆனால், தாழ்வான நிலையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில், விழுப்புரம் அருகே பிடாகம் தொடங்கி கண்டரக்கோட்டை வரை குவாரிகள் அமைத்து, மணல் அள்ளப்பட்டதால், தென்பெண்ணை ஆறு மேலும் தாழ்வாகிப்போனது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த தண்ணீரும், மலட்டாறில் எட்டிப் பார்க்கும் அளவில் கூட இல்லாமல் வறண்டு போய் கிடக்கிறது. இந்த நிலையில், நீண்ட காலத்துக்குப் பிறகு, தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பி கடந்த வாரம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மலட்டாறைத் தொடாமல் தாழ்வான தென்பெண்ணையில் வேகமாக அடித்துச் செல்கிறது. இதனால், மலட்டாறு பாசன விவசாயிகள் வழக்கமான வேதனையில் உள்ளனர்.
 மாற்றுத் திறன் விவசாயியின் சேவை: விழுப்புரம் அருகே தளவானூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி விவசாயியான தணிகவேல், தென்பெண்ணை ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டி மலட்டாறில் தண்ணீரை திருப்பிவிட்டுள்ளார்.

தென்பெண்ணையிலிருந்து மலட்டாறு பிரியும் தளவானூர் கொங்கொரகொண்டான் பகுதியிலிருந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை வரை தனது சொந்த செலவில் கால்வாய் வெட்டினார்.

அதன்மூலம், மலட்டாற்றில் தண்ணீரை திருப்பிவிட்டுள்ளார். நீண்ட காலத்துக்குப் பிறகு சித்தாத்தூர் பகுதி வரை பாய்ந்து மலட்டாறு குட்டைகளில் வழிந்தோடி வருகிறது.

இதுதொடர்பாக, தணிகவேல் கூறியதாவது:
 தென்பெண்ணையைக் காட்டிலும், மலட்டாறு மேடாகி உள்ளதால், தண்ணீர் வரத்தின்றியே உள்ளது. மலட்டாறில் தண்ணீர் வந்தால்தான் தளவானூர், சித்தாத்தூர், சேர்ந்தனூர் என கடலூர், புதுவை மாநில எல்லை வரை பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும், விவசாய நிலங்களும் பாசனவசதியும் பெறும்.

விழுப்புரம் நகராட்சிக்கும், பல கிராமங்களுக்கும் குடிநீர் தேவையளிக்கும் ஆழ்துளைக் கிணறுகளும் ஊற்றெடுக்கும்.

இங்கே தென்பெண்ணை பிரியும் இடத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தடுப்பணை அடித்துச் செல்லப்பட்டது. மீதமிருந்ததையும், மணல் குவாரியில் எடுத்துவிட்டனர். இதனால், மேடான மலட்டாறுக்கு தண்ணீர் வருவது கேள்விக்குறியாகிவிட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் விவசாயிகள் கூட்டு முயற்சியில் எனது தலைமையில் வாய்க்கால் அமைத்து மலட்டாறுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

தற்போது எனது செலவில் 3 கி.மீ தொலைவுக்கு கால்வாயை ஆழப்படுத்தி மலட்டாறில் தண்ணீரை திருப்பிவிட்டுள்ளேன். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து என் போன்ற விவசாயிகளும், பொது மக்களும் பயன்பெறுவார்கள் என்றார்.

மறைந்த தடுப்பணையைப் புதுப்பிக்க வேண்டும்: மலட்டாறு தொடங்கும் பகுதியில் நீண்ட காலத்துக்கு முன்பிருந்த தடுப்பணையைப் புதுப்பித்து கட்டமைக்க வேண்டும். இதனால், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்தின் போது, மலட்டாறிலும் தண்ணீர் திருப்பிவிட எளிதாகும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஒரு லட்சம் ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழியாக அமையும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

மலட்டாறில் தண்ணீர் செல்வதால், ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுவதுடன், தென்பெண்ணை ஆற்றில் சென்று வீணாக கடலில் கலக்கும் தண்ணீரையும் பயனுள்ளதாக்க முடியும். அரசும், பொதுப் பணித் துறை நிர்வாகமும் இதை ஆய்வு செய்து, தடுப்பணை அமைத்து, மழை வெள்ள நீரை பயனுள்ளதாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com