தமிழக அரசின் செயல்படாத நிலையால் வாக்களித்த மக்களுக்கு தலைக்குனிவு: ராமதாஸ்

தமிழக அரசின் செயல்படாத நிலையால் வாக்களித்த மக்களுக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கூறினார்.

தமிழக அரசின் செயல்படாத நிலையால் வாக்களித்த மக்களுக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கூறினார்.
 விழுப்புரத்தில் வருகிற செப்.17-ஆம் தேதி பாமக சார்பில் சமூக நீதி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக, ஜானகிபுரம் புறவழிச் சாலை அருகே நடைபெற்று வரும் விழா ஏற்பாடுகளை, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை பார்வையிட்டார்.
 அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய சமுதாயத்தினருக்கான கல்வி, வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு கோரி 7 நாள் தொடர் போராட்டத்தை, கடந்த 1987-ஆம் ஆண்டு, செப்.17-இல் நடத்தினோம். அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். அன்றைய தினத்தை தியாகிகள் தினமாக கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தி வருகிறோம். அந்த போராட்டத்தின் பயனாக, 108 சமுதாயத்தினருக்கு மிகவும் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு கிடைத்தது. மிகவும் பிற்பட்டோர் என்ற பிரிவையும் அரசு உருவாக்கியது. இருந்தபோதிலும், முழுமையான சமூகநீதி கிடைக்கப்படாத நிலையே உள்ளது. நிகழ் ஆண்டு தியாகிகள் நினைவு தினத்தில், அனைவரும் திரண்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் செப்.17-இல், விழுப்புரத்தில் சமூக நீதி மாநில மாநாடு நடத்தப்படுகிறது. சமூக நீதி காப்பதற்கு, அனைத்துத் தரப்பு மக்களும் இந்த மாநாடு வாயிலாக துணை நிற்க வேண்டும் என்றார். அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ராமதாஸ் கூறியதாவது:
 தமிழக அரசு எங்கே செயல்படுகிறது? இவர்கள் யாரிடம் முறையிடுகிறார்கள் என்றே கேள்வி எழுகிறது. பெரும்பான்மை இல்லாத, இப்போதைய ஆளும் கட்சியின் செயல்படாத நிலையால் நம்பி வாக்களித்த மக்களுக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. ஆளுநரும் தனது அரசியல் கடமையை செயல்படுத்தத் தயங்குபவராக காணப்படுகிறார்.
 நீட் தேர்வுக்கு தடை கோரி ஆரம்ப காலம் முதலே பாமக குரல் கொடுத்து வருகிறது. கடந்த 2007 வாக்கில், பொது நுழைவுத் தேர்வை அரசு கொண்டு வந்தபோதே, இது ஏழை மாணவர்கள் நுழையாத் தேர்வு என்று எதிர்ப்பு தெரிவித்தேன்.
 இதுதொடர்பாக, இந்த மாநாட்டில் அன்புமணி விரிவாக பேசுவார்.
 மதுக் கடைகளை மூடுவதற்கு நீதிமன்றம் வரை போராடி வென்றோம். ஆனால், விதிகளை மாற்றி மீண்டும் மதுக் கடைகளை அரசு திறந்து வருகிறது. இனி ஊடகங்கள் தான் ஓரணியில் குரல்கொடுத்து மூட வேண்டும் என்றார் அவர்.
 கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு, முன்னாள் எம்.பி. தன்ராஜ், மாநில துணைப் பொதுச் செயலர் தங்க.ஜோதி, சிவக்குமார், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, மாவட்டச் செயலாளர் புகழேந்தி, சரவணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பா.பழனிவேல், துணைத் தலைவர் வே.அரிகரன், ஒன்றியச் செயலர் குழந்தைவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com