பெரம்பலூர் வியாபாரி கொலை வழக்கு: பெண் உள்பட மூவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே பெரம்பலூரைச் சேர்ந்த வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, கள்ளக்குறிச்சி

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே பெரம்பலூரைச் சேர்ந்த வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
சின்னசேலத்தை அடுத்த தோட்டப்பாடி எல்லைப் பகுதியில் சுந்தரகவுண்டர் என்பவரது நிலம் அருகே சாலையோரம், சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த 17.9.16 இரவு சடலமாகக் கிடந்தார். இதுதொடர்பாக கீழ்க்குப்பம் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், கொலை வழக்காக மாற்றி சின்னசேலம் காவல் ஆய்வாளர் சா.கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், இறந்து கிடந்தவர் பெரம்பலூர் வடக்கு மாதவி தெருவைச் சேர்ந்த முத்துசாமி மகன் செந்தில் (34) என்பது தெரியவந்தது. இவர், தனது மனைவி கவிதாவுடன் (30) பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த சிறுநிலா கிராமத்தில் முகமதுஅலி என்பவரது குடியிருப்பு வளாகத்தில் தங்கி, மிக்சர் வியாபாரம் செய்து வந்தார். செந்தில், தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்லும்போது பெரம்பலூரைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
இதன் மூலம், பாப்பாத்தியிடம் செந்தில் ரூ.மூன்றரை லட்சம் கடனாக பெற்றுள்ளார். இதுதவிர, மேலும் சிலரிடமும் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நடத்தி வந்த முகமது அலியின் சகோதரர் சம்சுதீன் (40) என்பவருக்கும், செந்தில் மனைவி கவிதாவுக்கும் நெருங்கியத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த செந்தில் இருவரையும் கண்டித்தார். மேலும், பாப்பாத்தியிடம் வாங்கிய கடனை அடைக்க செந்தில், தனது மனைவியுடனான நெருங்கியத் தொடர்பை கூறி சம்சுதீனிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், சம்சுதீனுக்கும் செந்திலுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது காதலுக்கு இடையூறாக இருந்த செந்திலை தீர்த்துக் கட்ட சம்சுதீன் தனது நண்பர் மணிகண்டனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.
தொடர்ந்து, கடந்த 16.9.2016 இரவு ரூ.5 லட்சம் தருவதாக செந்திலை வரவழைத்து, இருவரும் சேர்ந்து செந்திலுக்கு குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து காரில் அழைத்துச் சென்று, விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள கடவனூர் பகுதியில் வைத்து செந்திலை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, சடலத்தை சாலையோரம் வீசிச் சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக, கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பெரம்பலூர் மாவட்டம், சிறுநிலா கிராமத்தைச் சேர்ந்த அப்துல் சுக்கூர் மகன் சம்சுதீன் , அவரது நண்பர் மணிகண்டன் (41), செந்தில் மனைவி கவிதா ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.செல்வமுத்துக்குமாரி முன் சனிக்கிழமை நடைபெற்றது.
விசாரணை முடிவில் சம்சுதீன், மணிகண்டன், கவிதா ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் சம்சுதீன், மணிகண்டனுக்கு தலா 6 ஆயிரம் அபராதம், 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், கவிதாவுக்கு ரூ.3000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
ஒரே ஆண்டில் தீர்ப்பு
இந்த வழக்கில் கடந்த ஆண்டு இதே நாளில் (செப்.16) செந்தில் கொலை செய்யப்பட்டார். அதே நாளில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு ஒரே ஆண்டில் முடிக்கப்பட்டதால் மாநில காவல் இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், சிறந்த முறையில் விசாரணை மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததற்காக தடயவியல் நிபுணர் சண்முகம், காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கடந்த மாதம் பாராட்டி சான்றிதழ் வழங்கியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com