தமிழகத்தில் சமூக நீதி கிடைக்க பாமக தலைமையில் ஆட்சி மாற்றம் வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க பாமக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் கூறினார்.

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க பாமக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் கூறினார்.
 விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரத்தில் பாமக சார்பில் சமூக நீதி மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு, கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு முன்னிலை வகித்தார்.
 மாநாட்டில் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் பங்கேற்று ஆற்றிய சிறப்புரை:
 கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இட ஒதுக்கீடு கேட்டு எனது அழைப்பை ஏற்று போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். அப்போது, 21 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். அவர்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. சமூக நீதியை நிலைநாட்டியவர் தந்தைப் பெரியார். ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் சமூக நீதி தேவை.
 தற்போது தமிழகத்தில் இருப்பது சமூக நீதியும், சம நிலையும் இல்லாத சமுதாயம். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் சமூக நீதி இல்லை. அதனைச் சரிசெய்ய வேண்டும். அதற்குத் தீர்வு அன்புமணிதான். தமிழகத்தில் 21 பேர் உயிர்த் தியாகம் செய்ததால், 3 கோடி மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நமக்கு வகுப்புவாத பிரதிநிதித்துவம் வேண்டும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைவருக்கும் ஒரே விதமான கல்வி, 100 சதவீதம் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். சமூக நீதி, அனைவருக்கும் சமமான, கட்டணமில்லாத கல்வி கிடைக்க வேண்டும்.
 அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க தமிழகத்தில் மாற்றம் தான் தீர்வு. அரசியலில் மாற்றம், ஆட்சியில் மாற்றம் வேண்டும். மாற்றம் என்றால் மீண்டும் திராவிடக் கட்சிகள் அல்ல. அன்புமணிக்கு ஒரு வாய்ப்பைத் தருவோம். அவரிடம் துடிப்பும், ஆற்றலும் உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டே மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். நாம் தவறவிட்டோம். எனவே, தமிழகத்தில் சமூக நீதி கிடைக்க பாமக தலைமையில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள் என்றார் ராமதாஸ்.
 மாநாட்டில் அன்புமணி பேசியதாவது: தமிழகத்தின் உரிமை
 களைப் பெற அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 371-இல் திருத்தம் செய்ய வேண்டும். ஆந்திரம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் இந்தத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் 7-இல் 6 மாநிலங்களில் இந்தத் திருத்தம் உள்ளது. 371-இல் திருத்தம் செய்யப்பட்டால், மாநிலத்தின் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் பாதுகாக்கப்படும். ஹைட்ரோ கார்பன் திட்டம், ஓ.என்.ஜி.சி. போன்ற திட்டங்களை மாநிலத்தில் மத்திய அரசு தொடங்க முடியாது.
 கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மக்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வந்தன. பாமகதான் 3 முறை இட ஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது மாநில சுயாட்சி வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், பிரதமரான பிறகு மாநில உரிமைகளைப் பறிக்க நினைக்கிறார் என்றார் அவர்.
 முன்னதாக, கடந்த 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளின் உருவப் படங்களுக்கு ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மாநிலப் பொதுச் செயலர் வடிவேல் ராவணன், முன்னாள் எம்பி தன்ராஜ், வழக்குரைஞர் பாலு, பசுமைத் தாயகம் செயலர் அருள், மாநில துணைப் பொதுச் செயலர் தங்க ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 தீர்மானங்கள்: மாநாட்டில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தின் பின் தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்துக்கு சிறப்புத் திட்டங்களை கொண்டு வர வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com