அதிமுக தினகரன் அணி பொதுக் கூட்டம்: இபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர் போலீஸில் புகார்

விழுப்புரத்தில் அனுமதியின்றி பெயர்களைப் போட்டு மோதல் ஏற்படுத்தும் வகையில் டிடிவி தினகரன் அணியினர் நடத்த உள்ள பொதுக் கூட்டம் தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக இபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர்

விழுப்புரத்தில் அனுமதியின்றி பெயர்களைப் போட்டு மோதல் ஏற்படுத்தும் வகையில் டிடிவி தினகரன் அணியினர் நடத்த உள்ள பொதுக் கூட்டம் தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக இபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர் போலீஸில் புகார் தெரிவித்தனர்.
விழுப்புரத்தில் அதிமுக தினகரன் அணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்துக்கான பிரசுரங்களில், அதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பெயரையும் போட்டு, மோதல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, அந்த அணியினர் விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு புகார் தெரிவித்தனர்.
விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு, அதிமுக அம்மா அணி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.பசுபதி, மாணவரணி அசோக்குமார், வழக்குரைஞரணி செந்தில் உள்ளிட்டோர் தலைமையில் திரளாக வந்த கட்சியினர், டிஎஸ்பி சங்கரிடம் புகார் மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: அதிமுக தினகரன் அணியினர், ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக வழங்கப்பட்டுள்ள பிரசுரங்களில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களின் பெயர்களை அனுமதியின்றி போட்டுள்ளனர்.
மேலும், பிரசுரம் அச்சிட்டதற்கான அச்சகத்தின் பெயர் போன்றவற்றை அவர்கள் குறிப்பிடவில்லை. மோதல் ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில், நிர்வாகிகள் பெயரை அனுமதியின்றி வெளியிட்டு பொதுக்கூட்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால், கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
அனுமதியின்றி நிர்வாகிகள் பெயர்களை போட்டுள்ள அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து, அவர்கள் நகர காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
புகார் மனுவைப் பெற்ற டிஎஸ்பி சங்கர், இதுகுறித்து விசாரித்து, காவல் கண்காணிப்பாளர், அரசு வழக்குரைஞர் தரப்பில் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com