சிறப்பாசிரியர் பணித் தேர்வு: தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காததால் ஏமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற சிறப்பாசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 3,093 பேர் கலந்து கொண்டனர். காலதாமதமாக வந்த சிலர் தேர்வு எழுத முடியாமல்

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற சிறப்பாசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 3,093 பேர் கலந்து கொண்டனர். காலதாமதமாக வந்த சிலர் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை நடத்தியது.
விழுப்புரம் மாவட்டத்தில் தையல் ஆசிரியர் தேர்வுக்கு 760 பேரும், உடல்கல்வி ஆசிரியருக்கு 1,576 பேரும், ஓவிய ஆசிரியருக்கு 816 பேரும், இசை ஆசிரியருக்கு 113 பேரும் என மொத்தம் 3,265 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 54 பேர் உடல் நிலை பாதித்த மாற்றுத் திறனாளிகள். 3 பேர் பார்வையற்ற தேர்வர்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 172 பேர் வரவில்லை. மீதமுள்ள 3,093 பேர் தேர்வு எழுதினர்.
இதில், 54 மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்றனர். பார்வையற்ற 3 தேர்வர்கள் சொல்வதைக் கேட்டு எழுதுவோரைக் கொண்டு தேர்வு எழுதினர். மாவட்டத்தில் விழுப்புரம் விஆர்பி மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, வளவனூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 9 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 9 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 9 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 9 துறை அலுவலர்கள், 9 கூடுதல் துறை அலுவலர்கள், 182 அறை கண்காணிப்பாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்வுகள் நடைபெறும் மையங்களுக்கு பேருந்து வசதி, மின்சாரம், குடிநீர், தனிக் கழிவறை வசதி மற்றும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், விழுப்புரம் விஆர்பி மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்டம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி, விழுப்புரம் கோட்டாட்சியர் சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தாமதமாக வந்ததால் ஏமாற்றம்: வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்துக்கு, காலை 10 மணிக்குப் பிறகு தாமதமாக சிலர் தேர்வு எழுத வந்துள்ளனர். நேரமாகிவிட்டதால், தேர்வு மைய வாயில் கதவை கண்காணிப்பாளர்கள் அடைத்துவிட்டனர்.
இதனால் ஏமாற்றமடைந்த தேர்வர்கள் தேர்வு கண்காணிப்பாளரிடம் முறையிட்டனர். தேர்வு தொடங்கும் நேரம் கடந்துவிட்டதால், அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், தேர்வர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து, விருத்தாசலத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ரஞ்சித் கூறியதாவது: கடலூர் மாவட்டம், விருத்தாசலம், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை உள்ளிட்ட நெடுந்தொலைவிலிருந்து, 10 பேர் வரை தேர்வில் பங்கேற்க வந்திருந்தோம்.
வளவனூர் தேர்வு மையத்தை காலை 9.50 மணிக்கே மூடிவிட்டனர். சிறிது நேரம் தாமதமாக 10 மணிக்கு வந்தபோதும் எங்களை அனுமதிக்கவில்லை.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் கூட 10 நிமிட தாமதமாக வந்தால் மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்கின்றனர். ஆனால், இத்தேர்வில் அனுமதிக்கவில்லை.
இந்தத் தேர்வுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வரை நீதிமன்றத் தடை ஆணையும், பிறகு தடை ஆணை நீக்கியதாகவும் குழப்பம் நிலவியது. இந்த குழப்பத்திலும், நீண்ட காலத்துக்குப் பிறகு ஆசிரியர் பணிக்கான தேர்வு நடந்த நிலையில் அந்த வாய்ப்பை இழந்துவிட்டோம் என்று வேதனையுடன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com