விழுப்புரம் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் கடை வீதிகளில் நீண்ட காலமாக இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை நகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் சனிக்கிழமை அகற்றினர்.

விழுப்புரம் கடை வீதிகளில் நீண்ட காலமாக இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை நகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் சனிக்கிழமை அகற்றினர்.
விழுப்புரத்தில் பிரதான கடை வீதிகளான காந்தி வீதி, பாகர்ஷா வீதிகளில் ஏராளமான மளிகை, காய்கறி அங்காடிகள், துணிக் கடைகள், இனிப்பகங்கள் உள்ளன. இந்த இரு வீதிகளிலும் ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு ஏற்பட்டது. இது தொடர்பாக, வியாபாரிகள் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல் துறையினருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, போலீஸார் ரோந்து சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தனர்.
இருந்த போதிலும், மீண்டும், மீண்டும் நடைபாதைக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் மூலம் ஆக்கிரமிப்புகள் தொடர்வதால், பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக அமைந்தது. இது குறித்து, வணிகர் சங்கத்தினர் மீண்டும் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்தனர்.
இதனையடுத்து, சனிக்கிழமை காலை விழுப்புரம் நகராட்சி மூலம் காந்தி வீதி, பாகர்ஷா வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் செந்தில்வேல் மேற்பார்வையில், 50-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள், காந்தி வீதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
மேற்கு காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர் காந்திமதிநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காந்தி வீதியில் வீரவாழி மாரியம்மன் கோயில் முதல் காமராஜர் வீதி சந்திப்பு வரை சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள், தள்ளுவண்டிகள், நடைபாதைக் கடைகளை அகற்றினர். இதில், பெரும்பாலும் வியாபாரிகளும் தங்களது கடைக்கு வெளியே விற்பனை பொருள்களை சாலை வரை விரித்து வைத்து ஆக்கிரமித்திருந்தனர். அதன் பிறகு நடைபாதைக் கடையினர் ஆக்கிரமித்திருந்ததால், சாலையின் பெரும்பகுதி அடைபட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி, வியாபாரிகளை எச்சரித்தனர்.
இதையடுத்து, பகல் 12 மணிக்கு மேல், பாகர்ஷா வீதியிலும் காய்கறி கடைகள், தள்ளுவண்டிகள், கடையின் முகப்பு ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்களும், போலீஸாரும் அகற்றினர். இதனால், இரண்டு கடைவீதி சாலைகளும் விசாலமாக காட்சியளித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com