சரக்கு வாகனம் கவிழ்ந்து பெண் சாவு
By திருக்கோவிலூர், | Published on : 16th April 2018 08:28 AM | அ+அ அ- |
திருக்கோவிலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சிறிய ரக சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தார். 17 பேர் காயமடைந்தனர்.
திருக்கோவிலூரை அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மனைவி மல்லிகா(50). இவர், அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை வாணாபுரம் காளிக் கோயிலுக்குச் சென்றார்.
பின்னர், வீட்டுக்குச் செல்வதற்காக அங்குள்ள நிறுத்தத்தில், பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி ஏறினார். இவருடன், அங்கு பேருந்துக்காக காத்திருந்த பல கிராமங்களைச் சேர்ந்த 16 பேர் ஏறினர்.
இந்த நிலையில், இந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி பகண்டை கூட்டுச்சாலை புத்துமாரியம்மன் கோயில் அருகே சாலையில் கவிழ்ந்தது.
இதில், மல்லிகா நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். வாகன ஓட்டுநர் உள்பட 17 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பகண்டை கூட்டுச்சாலை போலீஸார் வழக்குப்பதிந்து வாகன ஓட்டுநரான சங்கராபுரத்தை அடுத்த ராமராஜபுரத்தைச் சேர்ந்த தங்கவேலுவை (38) கைது செய்தனர்.