திருவாமாத்தூர் ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் இருமுடியுடன் பாதயாத்திரை
By விழுப்புரம், | Published on : 16th April 2018 08:45 AM | அ+அ அ- |
விழுப்புரம் அருகேயுள்ள திருவாமாத்தூர் ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து, இரு முடி சுமந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.
திருவாமாத்தூர் வடசபரி ஐயப்பன் கோயிலில் 8-ஆம் ஆண்டு சித்திரை விசு திருவிழா கடந்த மார்ச் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.15) மாலை விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெண் பக்தர்கள் உள்பட ஏராளமானோர் இருமுடி கட்டிக் கொண்டனர்.
அங்கு, ஐயப்பன் உற்சவர் சிலைக்கு அபிஷேகங்கள் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர், அங்கிருந்து திருவாமாத்தூர் ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி சுமந்து, பக்தர்கள் பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக அவர்கள் கோயிலைச் சென்றடைந்தனர். திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது.