இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் உரிமை கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் தகவல் 

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அந்த நாட்டின் கல்வித் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அந்த நாட்டின் கல்வித் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 இரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள இலங்கை கல்வித் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் விழுப்புரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு திங்கள்கிழமை வந்தார். அந்தக் கல்லூரியில் செயல்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் கல்வி முறையை இலங்கை கல்வித் துறை செயலர் திஸ்ஸ ஹேவ விதாரன, உதவிச் செயலர் பியுலா ஆகியோருடன் பார்வையிட்டு அதுகுறித்து கேட்டறிந்தார்.
 பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் பள்ளிக் கல்வியை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக, தமிழகத்துக்கு வந்து இங்குள்ள கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை பார்வையிட்டோம். இலங்கையிலும் இதுபோன்று பிளஸ்-2 வகுப்பு வரை டிஜிட்டல் முறை கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி இலங்கையில் போதிக்கப்படுகிறது. ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. சிங்களர், தமிழர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் சமமான கல்வி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 வரை கட்டாயக் கல்வி கொண்டுவரப்பட்டுள்ளது.
 இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெரிய நூலகமான யாழ்ப்பாணம் நூலகம் போரின்போது சேதமடைந்தது. அது சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அந்த நூலகத்துக்கு தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு லட்சம் புத்தகங்களை வழங்கினார். தமிழகத்தின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இங்கு தமிழ் மொழியை குறைவாகப் பேசுகின்றனர்.
 இலங்கை-தமிழகம் இடையே ஆசிரியர்கள் பரிமாற்றம் செய்யும் திட்டம் உள்ளது. இதுகுறித்து தமிழக அரசிடம் பேசி வருகிறோம். இலங்கையின் வடக்கு மாகாணம் 30 ஆண்டுகள் போரால் பாதிக்கப்பட்டுள்ளது. போரின்போது தமிழர்களின் நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது. பல தமிழர்களின் நிலங்கள் எங்கு இருக்கின்றன என்பதே தெரியவில்லை. எனினும், அங்கு மக்கள் ஓரளவு நிம்மதியாக இருக்கிறார்கள். தற்போது எந்த பிரச்னையும் கிடையாது. கல்வி கிடைக்கிறது. அரசியல் உரிமை நிலைநாட்டப்பட்டு வருகிறது.
 இலங்கைக்கு அதிக தொகையை இந்தியா கொடையாகவும், சீனா கடனாகவும் வழங்குகின்றன. இதுதான் இரு நாடுகளும் இலங்கைக்கு செய்து வரும் பண உதவி என்றார்.
 கல்விக் குழுமத்தின் தலைவர் இ.எஸ்.சாமிக்கண்ணு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com