கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா தொடக்கம் 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா சாகைவார்த்தலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா சாகைவார்த்தலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முக்கிய நிகழ்வான அரவான் சுவாமி கண் திறப்பு வருகிற மே 1ஆம் தேதி நடைபெறுகிறது.
 பிரசித்திபெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வரலாற்றுச் சிறப்பு உண்டு. மகாபாரதத்தில் கௌரவர்களுடனான போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால் யுத்த தேவதையை திருப்திபடுத்துவதற்காக 32 சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய அர்ச்சுனனுக்கும் நாகக் கன்னிக்கும் பிறந்த அரவானை களப்பலி கொடுத்ததாக வரலாறு.
 அரவான் கூத்தாண்டவராக உள்ள இந்தக் கோயிலின் சித்திரைப் பெருவிழா சாகைவார்த்தலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, இந்தக் கோயில் அருகில் உள்ள அம்மனுக்கு கூவாகம், நத்தம், சிவிலியான்குளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்கள் கூழ், கஞ்சி, வெண்பொங்கல் உள்ளிட்ட பொருள்களைச் சமைத்து வந்து படைத்தனர். பின்னர், அதனை அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு வழங்கினர்.
 மொத்தம் 18 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் ஏப். 18-ஆம் தேதி பந்தலடி என்.தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று பாரத சொற்பொழிவு தொடங்கி மே 4ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. 19-ஆம் தேதி சந்தனு சரிதம் நிகழ்ச்சியும், இரவு சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. ஏப்.20ஆம் தேதி பீஷ்மர் பிறப்பும், 21-ஆம் தேதி தர்மர் பிறப்பும், 22-ஆம் தேதி பாஞ்சாலி பிறப்பும், 23-ஆம் தேதி பகாசூரன் வதமும் , 24-ஆம் தேதி பாஞ்சாலி திருமணமும், 25-ஆம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும், 26-ஆம் தேதி ராஜசுயயாகமும் நடைபெறுகிறது. 27-ஆம் தேதி விராடபர்வம் நிகழ்ச்சி என்.தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் வெள்ளிக்கால் நடும் நிகழ்ச்சியும், 28-ஆம் தேதி கிருஷ்ணன் தூதும், 29-ம் தேதி அரவான் பலியும், கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாயணமும், 30-ஆம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
 மே 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமிக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதுதான் முக்கியத் திருவிழாவாகும். அன்று இரவு பல்வேறு மாநிலங்களில் உள்ள திருநங்கைகள் கோயில் முன் ஒன்றுகூடி புதுப்பெண்களைப் போல அலங்கரித்து பூசாரி கைகளால் தாலிக்கட்டிக் கொள்வர். மே 2-ஆம் தேதி தேரோட்டம், 3-ஆம் தேதி விடையார்த்தி நடைபெறுகின்றன. மே 4-ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com