விதிகளை மீறி வைக்கப்படும் பதாகைகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விழுப்புரத்தில் விதிகளை மீறி வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளால் விபத்துகள் ஏற்படுவதால் அவற்றை அகற்றி வரைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விழுப்புரத்தில் விதிகளை மீறி வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளால் விபத்துகள் ஏற்படுவதால் அவற்றை அகற்றி வரைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விழுப்புரத்தில் கடந்த சில மாதங்களாக முக்கியச் சாலை சந்திப்புகளில் வைக்கப்படும் 
விளம்பரப் பதாகைகள் உரிய காலத்தில் அகற்றப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இந்தப் பதாகைகள் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளதால், அவை அடிக்கடி கீழே விழுவதும், இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதும் தொடர்கிறது. 
விழுப்புரம் நான்கு முனைச் சாலை சந்திப்பு, பழைய பேருந்து நிலைய சந்திப்பு, காந்தி சிலை சந்திப்பு, ரயில்வே மேம்பால வாயில் பகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் பகுதி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் டிஜிட்டல் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவது தொடர்கிறது. 
இந்த இடங்களில் பெரும்பாலும் அனுமதியின்றி அரசியல் கட்சியினரால் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சங்கத்தினர், தனி நபர்களின் சுப நிகழ்ச்சிகள் குறித்த பதாகைகளும் வைக்கப்படுகின்றன. இதனால் விதிமீறல்கள் தொடர்கின்றன. காந்தி சிலை, பழைய பேருந்து நிலைய சந்திப்புப் பகுதிகளில் பயணிகள் நிற்பதற்குக் கூட இடமின்றி பதாகைகள் ஆக்கிமித்துள்ளன. இதனால், பயணிகள் சாலையில் நிற்பதும், அவர்களுக்காக பேருந்துகள் சாலையில் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்புப் பதாகைகளால், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை என்றும், இரு சக்கர வாகனங்களை சாரையோரம் நிறுத்துவதற்குக் கூட இடமில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். சில நேரங்களில் காற்று வீசும்போது, பொது மக்களின் மீது பதாகைகள் விழும் நிலை ஏற்படுகிறது. 
புதிய பேருந்து நிலையம் எதிரே கலைஞர் நகர் சாலை வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பதாகை சனிக்கிழமை திடீரென கீழே விழுந்ததில், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியர் காயமடைந்தனர். அவர்களை பொது மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே போல, அண்மையில் நான்கு முனைச் சாலை சந்திப்பில் வைத்த பதாகைகள், மின்கம்பத்தில் விழுந்து விபத்தை ஏற்படுத்தின. பழைய பேருந்து நிலையத்திலும் பயணிகள் மீது பதாகைகள் விழுந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் டிஜிட்டல் பதாகைகள் வைப்பதற்கு அந்தந்த நகராட்சி நிர்வாகத்தினர், கோட்டாட்சியர், காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு நாள், பின்பு ஒரு நாள் விளம்பரப் பதாகைகளை வைத்து அகற்றிவிட வேண்டும். அனுமதி பெற்றதற்கான பதிவு பதாகையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற போலீஸாரின் உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. 
எனவே, எதிர்வரும் காற்று, மழைக் காலங்களில் பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம், நகராட்சி, காவல் துறையினர் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com