கோயில்களில் மகா சிவராத்திரி கோலாகலம் 

விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.

விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
 விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரி விழா வழிபாடு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு 1008 சங்கு பூஜையுடன் தொடங்கியது.
 தொடர்ந்து ஹோமங்கள் நடைபெற்று, நண்பகல் 12 மணிக்கு பூர்ணாஹுதி, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 3.30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
 மாலை 6 மணிக்கு சிவராத்திரி விழா முதல் கால பூஜை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 11 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதைத் தொடர்ந்து 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
 தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்றது.
 6 மணிக்கு கைலாசநாதர் திருவீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு லட்சு பிரசாதம் வழங்கப்பட்டது.
 விழாவையொட்டி, தெய்வத் தமிழ்ச் சங்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை மாலை கோயிலிருந்து சிவராத்திரி சிவாலய நடைபயணம் தொடங்கியது.
 முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் நடைபயணத்தை தொடக்கி வைத்தார். நடைபயணக் குழுவினர் கீழ்ப்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோயில், மகாராஜபுரம் சுந்தரேஸ்வரர் கோயில், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆதிவாலீஸ்வரர் கோயில் வழியாகச் சென்று கைலாசநாதர் கோயிலை அடைந்தனர்.
 வீரட்டானேஸ்வரர் கோயிலில்... திருக்கோவிலூர்-கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் மஹா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரருக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் புதன்கிழமை காலை 6 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்று, 108 பால் குடங்கள், மூலிகைத் திரவியங்கள், பழச்சாறுகள் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.
 தொடர்ந்து, சோடசோபஹார தீபாராதனையுடன், ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலய பிரதட்சணம் நடைபெற்றது.
 மாலையில் பரத நாட்டியம், சமய சொற்பொழிவு, அகண்டாதார நாம, சிவ பஞ்சாச்சர, நமச்சிவாய ஜப நாம சங்கீர்த்தனையுடன், நான்கு கால பூஜைகள் நடைபெற்றன.
 விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 இதேபோன்று, அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயில், வீரபாண்டி அதுல்யநாதேஸ்வரர் கோயிலில் மஹா சிவராத்திரி விழா நடைபெற்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com