பத்திரப் பதிவுத் துறையில் இணைய வழி பதிவு தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் பத்திரப் பதிவுத் துறையில் இணையவழி சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

விழுப்புரம் மாவட்டத்தில் பத்திரப் பதிவுத் துறையில் இணையவழி சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 இதையடுத்து இந்த மாவட்டத்தில் உள்ள 33 சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் இணையவழி பதிவுகள் செயல்பாட்டுக்கு வந்தன.
 தமிழக பத்திரப் பதிவுத் துறையில், நில ஆவணத்துக்கான பழைய பதிவு முறைகளுக்கு விடைகொடுத்து, இணையவழி பதிவுத் திட்டத்தில் விரைவான பதிவை மேற்கொள்ளும் புதிய சேவைப்பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 எழுத்துப்பூர்வமான பழைய ஆவணப் பதிவுகளுக்கு மாற்றாக, இணையவழி பதிவு நிர்வாகத்தை மேற்கொள்ள பதிவுத் துறை அலுவலகங்களில் ஸ்டார் 2.0 என்ற புதிய மென்பொருள் திட்டம் ரூ.177 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மாநிலம் முழுவதும் சோதனை அடிப்படையில் இயங்கியது.
 இந்த வகையில், கடலூர் பதிவு மண்டலத்துக்கு உள்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 60 பதிவாளர் அலுவலகங்களில் இணைய வழி ஆவணப்பதிவு முறைக்கான பயிற்சியளித்து, சோதனை அடிப்படையிலான பணிகள் நடைபெற்றன.
 சென்னையில், இணையவழி சேவைத் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
 இதையடுத்து, மாநிலம் முழுவதும், செவ்வாய்க்கிழமை முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது.
 விழுப்புரம் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை முதல் இணைய வழி ஆவணப்பதிவு தொடங்கியது. விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மாவட்டப் பதிவாளர் குமரேசன் இந்தத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
 இதே போல, விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட 33 சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் இணைய வழி ஆவணப்பதிவு முறை பயன்பாட்டுக்கு வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com