போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்க முயற்சியா?: இரா.முத்தரசன் கேள்வி

போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபடுவதாக சந்தேகம் எழுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.

போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபடுவதாக சந்தேகம் எழுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.
 அரசுப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, விழுப்புரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பில் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. திமுக அவைத் தலைவர் கு.ராதாமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் வரவேற்றார்.
 கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் சிறப்புரையாற்றியதாவது: நிகழ் ஆண்டு பேருந்துக் கட்டண உயர்வையே தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக அரசு வழங்கியுள்ளது. பேருந்து சேவையில் லாபம் பார்க்கக் கூடாது. நஷ்டத்தில் இயங்குவதாக அரசு கூறிவருவது, போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கையோ என்ற சந்தேகம் எழுகிறது. தனியார் பேருந்துகளுக்குப் பின்னால் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் வருவாய் குறைகிறது. இதனை அரசு மாற்ற முடியும். ஆனால், செய்வதில்லை. 55 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தால் மக்கள் பரிதவிக்கின்றனர்.
 ஆந்திரத்தில் மத்திய அரசில் கூட்டணியில் உள்ள சந்திரபாபுநாயுடு, மாநில அரசுக்கு நிதி அறிவிக்காததால், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து நிதியையும் பெற்றுவிட்டார். ஆந்திர அரசு மிரட்டி, மத்திய அரசை பணிய வைத்துள்ளது. இங்கே தமிழக அரசு, பணிந்து கிடக்கிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகக் கூறும் தமிழக அரசு என்ன சாதித்திருக்கிறது? வறட்சி, புயல், எந்த நிதியையும் பெற முடியவில்லை. அரசே வறட்சியை அறிவித்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடனைக்கூட தள்ளுபடி செய்யவில்லை.
 ஆட்சியாளர்களுக்கு மக்கள் ஆதரவும் இல்லை, சொந்தக் கட்சியினர் ஆதரவும் இல்லை. இப்போதெல்லாம் அமைச்சர்களிடம் மக்கள் மனு அளிப்பதில்லை. எதிர்க்கட்சிகளிடம் தான் அளிக்கின்றனர். ஆட்சியாளர்களால் எதையும் செய்ய முடியாது. ஆட்சியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டனர். மாநில அரசின் உரிமையை பறிகொடுத்துள்ளனர்.
 மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறையில்லை என்றார்.
 கூட்டத்தில் திமுக மாவட்டப் பொருளாளர் புகழேந்தி, துணைச் செயலர் ஜெயச்சந்திரன், எம்எல்ஏக்கள் மஸ்தான், உதயசூரியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சீனுவாசகுமார், முன்னாள் தலைவர் குலாம்மொய்தீன், விசிக பொதுச் செயலர் துரை.ரவிக்குமார், மதிமுக மாநிலச் செயலர் மணி, கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com