ஒப்பந்தப் பணிகளை வழங்கக் கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 

அரசு ஒப்பந்தப் பணிகளை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரி, விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

அரசு ஒப்பந்தப் பணிகளை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரி, விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 விழுப்புரம் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் மாவட்டச் செயலர் இரா.லட்சுமணன் எம்பியும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அணியில் அமைச்சர் சி.வி.சண்முகமும் செயல்பட்டு வருகின்றனர்.
 கட்சி அளவில் இரு அணிகளும் இணைந்தாலும், விழுப்புரம் மாவட்டத்தில், கட்சிப் பதவிகளை மட்டும் பழையபடி பகிர்ந்துகொண்ட இவ்விரு அணியினரும் தனித்தனியாகவே செயல்பட்டு வருகின்றனர்.
 அதுபோல, அரசு ஒப்பந்தப்பணிகளை பெறுவதில் இரு அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பினருக்கு மட்டுமே ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுவதாகவும், மாவட்டச் செயலர்
 இரா.லட்சுமணன் அணியினர் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 இந்த நிலையில், விழுப்புரம் அருகே கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு இரா.லட்சுமணன் எம்பி தரப்பினரான முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் குப்புசாமி, ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன், ஊராட்சிச் செயலர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி பாலு, பாஸ்கர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை வந்து, அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த தங்கள் தரப்புக்கு பணிகள் வழங்குவதில்லை என்று தெரிவித்து கோஷமிட்டனர்.
 அவர்களை கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசமூர்த்தி, நாராயணன் மற்றும் அலுவலர்கள் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆளும் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் மாவட்டச் செயலர் இரா.லட்சுமணனின் தரப்பினர் அதிகளவில் உள்ள நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த ஒன்றியச் செயலர் பேட்டை முருகன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுரேஷ்பாபு ஆகியோருக்கு மட்டும் விதிகளை மீறி ஒப்பந்தப்பணிகளை வழங்குவதா எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தற்போது வழங்கவுள்ள ரூ.2 கோடி மதிப்பிலான ஊரக சாலை, பாலம், இலவச குடியிருப்பு போன்றவற்றுக்கான ஒப்பந்தப் பணிகளை தங்கள் தரப்பினருக்கும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
 இப்பிரச்னை தொடர்பாக, திங்கள்கிழமை பேசி, உரிய அளவில் பணிகளை ஒதுக்கி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.
 ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக ஆளும் கட்சியினரே ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com