சுமை தூக்கும் தொழிலாளர்கள் பிரச்னை: இன்று அமைதிப் பேச்சுவார்த்தை

விழுப்புரத்தில் கடைகளுக்கு சரக்குகளை இறக்குவதில் சுமை தூக்கும் தொழிலாளர்- வணிகர்கள் இடையே நிலவும் பிரச்னை தொடர்பாக வியாழக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருவாய்த் துறை மூலமாக காவல் துறை ஏற்பாடு செய்

விழுப்புரத்தில் கடைகளுக்கு சரக்குகளை இறக்குவதில் சுமை தூக்கும் தொழிலாளர்- வணிகர்கள் இடையே நிலவும் பிரச்னை தொடர்பாக வியாழக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருவாய்த் துறை மூலமாக காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
 விழுப்புரம் நகரில் இயங்கும் சுமார் 2 ஆயிரம் கடைகளுக்கு லாரிகளில் வரும் சரக்குகளை இறக்குவதில், கடை உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் இடையே கடந்த 15 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.
 இதையடுத்து, விழுப்புரம் சேம்பர் ஆப் காமர்ஸ்-சுமைத் தூக்கும் தொழிலாளர்கள், கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். அதில், வணிகர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை.
 இதனால், முன்பிருந்த நிலையே தொடர காவல்துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நடைமுறையின்படி, சுமை தூக்கும் தொழிலாளர்களே கடைகளுக்கு சரக்குகளை இறக்கி வந்தனர்.
 இந்த நிலையில், விழுப்புரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கடைக்காரர்கள், தாங்களே தொழிலாளர்களை வைத்து சுமைகளை இறக்கிக் கொள்வதாகவும், சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் தேவையில்லை என்றும் கூறினராம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் கடைகளுக்கு சரக்குகளை இறக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை புதன்கிழமை சந்தித்து பிரச்னை குறித்து எடுத்துரைத்தனர். இதேபோல, சுமை தூக்கும் தொழிலாளர்களும் ஜெயக்குமாரை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இதையடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய காவல்துறை தரப்பில் வருவாய்த் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
 இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில், விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர் முன்னிலையில் வருவாய்த் துறை சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என வட்டாட்சியர் சுந்தர்ராஜன் கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com