மக்களுக்கான சட்ட உரிமைகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும்: நுகர்வோர் குறைதீர் மன்ற ஆணையத் தலைவர் அறிவுரை 

மக்களுக்கான சட்ட உரிமைகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற ஆணையத் தலைவர் எஸ்.தமிழ்வாணன் அறிவுறுத்தினார்.

மக்களுக்கான சட்ட உரிமைகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற ஆணையத் தலைவர் எஸ்.தமிழ்வாணன் அறிவுறுத்தினார்.
 கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த, விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் தனியாகப் பிரிக்கப்பட்டு, நகராட்சி சமுதாயக் கூடத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.
 இதற்கான தொடக்க விழா விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர்(பொ) என்.கலியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், முதன்மை மாவட்ட நீதிபதி பி.சரோஜினிதேவி, கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் கே.லட்சுமிகாந்தம், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தை
 மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற ஆணையத்தின் தலைவர் எஸ்.தமிழ்வாணன் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
 ஆண்டு தோறும் டிச.24-ஐ தேசிய நுகர்வோர் நாளாகவும், மார்ச் 15-ஐ உலக நுகர்வோர் நாளாகவும் கொண்டாடுகிறோம். நாம் அனைவரும் நுகர்வோர்தான். வாங்கும் உணவு, உடை, பொருள்கள், சேவையில் குறைகள் இருந்தால் நாம் புகார் தெரிவித்து தீர்வு காண முடியும். இதற்கு நீதிமன்றத்துக்குப் போனால், தீர்வு கிடைக்க நீண்ட காலமாகலாம்.
 நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்குவது அவசியம். அது உரிமையும் கூட. பாதித்த நுகர்வோர் நேரடியாகவோ, வழக்குரைஞர், முகவரை வைத்தும் முறையிடலாம். மாவட்ட நுகர்வோர் மன்றம் மூலம் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும். மாநில மன்றத்தில் ரூ.1 கோடி வரை இழப்பீடு பெறலாம். இது முறையே ரூ.1 கோடி, ரூ.10 கோடி அளவில் உயர உள்ளது. அரியலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் விரைவாகத் திறக்கப்பட்டுள்ளன.
 இந்த மன்றத்துக்கு மத்திய அரசு ரூ.3 கோடி வழங்குகிறது. மாநில அரசு கட்டடங்களை வழங்குகிறது. இது மக்களுக்கான அமைப்பாகும். இதில், 90 நாளில் வழக்குகளை முடித்தாக வேண்டும். எளிமையானத் தீர்வு கிடைக்கும். அரசுத் துறையினரும் வழக்குத் தொடரலாம். பலதரப்பட்ட நுகர்வோர்களின் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தைக் காட்டிலும் விரைவில் தீர்வு கிடைக்கும்.
 22-ஆம் நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நாம், காலத்துக்கு ஏற்றவாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும். அனைவருக்கும் தரமான பொருள், எடை, விலை, சேவைகள் கிடைக்க வேண்டும். இதற்கு ஏட்டில் உள்ள சட்ட உரிமைகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றார்.
 விழாவில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர். நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் ஆர்.அமுதமொழி நன்றி கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com