விழுப்புரம் மாவட்டத்தில் நவீனமாகும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையின் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஜி.பி.எஸ். உள்ளிட்ட வசதிகளுடன் நவீனமாக்கப்பட உள்ளன. இதற்காக, ரூ.13 லட்சம் செலவில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. 

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையின் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஜி.பி.எஸ். உள்ளிட்ட வசதிகளுடன் நவீனமாக்கப்பட உள்ளன. இதற்காக, ரூ.13 லட்சம் செலவில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.
 தமிழகத்திலேயே மிக நீண்ட தொலைவு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் செல்லும் பகுதியாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது. இந்த நெடுஞ்சாலைகளில் விபத்து, குற்றச் சம்பவங்களை தடுக்கும் பணிகளை தடுக்க போலீஸார் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
 காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் நுழையும் என்.எச்.45 தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் அருகே ஓங்கூரிலிருந்து கடலூர் மாவட்ட எல்லை வரை 4 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மூலம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல, புதுச்சேரி - விழுப்புரம் சாலை, விழுப்புரம் - திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் - செஞ்சி சாலை, மரக்காணம் - புதுச்சேரி இசிஆர் சாலை, திண்டிவனம்-புதுச்சேரி சாலை, திண்டிவனம்-திருவண்ணாமலை சாலை என மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளை 15 ரோந்து வாகனங்கள் மூலம் போலீஸார் கண்காணிக்கின்றனர்.
 ரோந்து வாகன போலீஸார், நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை முடுக்கி விடுவது, விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைப்பது, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க உதவுவது, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை துரத்திச் சென்று பிடிப்பது, மணல் கடத்தல் உள்ளிட்ட கடத்தல் வாகனங்களை பிடிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
 ஆனால், இந்தப் பணிகளை ரோந்து போலீஸார் முறையாக மேற்கொள்வதில்லை என புகார் கூறப்படுகிறது. எனவே, நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை கண்காணிக்க வசதியாக ஏற்கெனவே ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தன. ஆனால், நாளடைவில் அவை பழுதாகியதால் செயல்படாமல் போயின. இதனால், குற்றச் சம்பவங்கள், விபத்துகள் நிகழும்போது அருகில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனம் எது என அறிவதில் சிக்கல் இருந்து வருகிறது. இந்த நிலையில், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் மீண்டும் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட நவீன உபகரணங்கள் பொருத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதற்காக, ரூ.13 லட்சம் செலவில் ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில், ரோந்து வாகனத்தின் மேல் வைக்கப்படும் எச்சரிக்கை ஒலியுடன் கூடிய சிகப்பு, நீல வண்ண விளக்குகள், எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட அறிவிப்பு பலகைகள், போலீஸாருக்கான பிரதிபலிப்பு ஆடைகள் 90, ரெயின் கோட்டுகள், ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்க நவீன வசதிகளுடன் கூடிய தொலைக்காட்சி உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன. இவை, அடுத்த சில வாரங்களில் ரோந்து வாகனங்களில் பொருத்தப்படும். பின்னர், ஜிபிஎஸ் கருவி ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டு, கணினி மூலமாக மாவட்டத்தில் உள்ள சாலை வரைபடங்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணிக்கப்படும் என்று எஸ்பி தெரிவித்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com