தொழிற்கூடங்கள் தொடங்க எளிய நடைமுறைகள்: அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை 

மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிற்கூடங்களை எளிதாக தொடங்குவது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன்

மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிற்கூடங்களை எளிதாக தொடங்குவது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். 
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாவட்ட தொழில் மையம் மூலம் சுயதொழில் தொடங்க 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடன் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது.
மாவட்ட தொழில் மையத்தில் குறு, சிறு தொழில்களை ஊக்குவிக்க தமிழக அரசு மூலம் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீட்டு மானியமாகவும், மின்மானியமாக மூன்று ஆண்டுக்கு 20 சதவீதம் மானியம் மற்றும் பல்வேறு சலுகைகளை மாவட்ட தொழில் மையம் வழங்குகிறது. தொழில் வளர்ச்சியை மேம்படுத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கொள்கைகள் எளிமையாக்கப்பட்டு, தொழிற்கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் இடர்பாடுகளைக் களைய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
இதற்காக குழு அமைக்கப்பட்டு உரிமங்கள், மின் இணைப்புகள் ஒப்புதல் ஆகியவற்றை சிரமமின்றி வழங்க வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழு வாயிலாக தொழிற்கூடங்கள் நிறுவுவதற்குத் தேவையான உரிமங்கள், மின் இணைப்புகள், ஒப்புதல்கள், தடையின்மை சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளலாம். தொழில் முனை வோர் www.investingintamilnadu. com என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். இந்தக் குழு 15 நாள்களுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு தொழில் தொடங்க கட்டட வரைபட அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ராஜகணேஷ், வங்கி மேலாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com