விதை உற்பத்திப் பணி: வேளாண் இணை இயக்குநர் ஆய்வு 

கண்டமங்கலம் வட்டாரத்தில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள விதை உற்பத்திப் பணிகளை வேளாண் இணை இயக்குநர் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 

கண்டமங்கலம் வட்டாரத்தில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள விதை உற்பத்திப் பணிகளை வேளாண் இணை இயக்குநர் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
 கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் கிராமத்தில் சங்கர், பிரபாகர், தேவநாதன் உள்ளிட்ட விவசாயிகளின் வயல்களில் வம்பன்-4 ரக உளுந்து பயிரிட்டுள்ள விதைப் பண்ணையை, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கி.செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
 அப்போது, உளுந்துப் பயிரில் காய்ப்புழுத் தாக்குதலைக் கண்ட அவர், அதனைக் கட்டுப்படுத்திட என்.பி.வைரஸ் கரைசலை தெளித்து பூச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகளிடம் அறிவுரை வழங்கினார்.
 இதனைத் தொடர்ந்து, மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தில் செல்வக்குமார் என்ற விவசாயி நிலத்தில் 2.5 ஏக்கர் அளவில் பயிரிட்ட வேர்க்கடலை பயிரையும், அதே பகுதியில் பழனி, சிவானந்தம் ஆகியோர் வயலில் கே.6 ரக வேர்க்கடலை பயிருக்கான விதைப் பண்ணையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேர்க்கடலை பயிருக்கு அதிக உற்பத்திக்காக தற்போது, மண் வளத்தை மேம்படுத்த ஜிப்சம் இட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
 தொடர்ந்து, வடுகுப்பம் கிராமத்தில் பத்மநாபன் விவசாய நிலத்தில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி விதைக்கரணைக்காக வைத்துள்ள நிழல்வலைக் கூடத்தையும் இணை இயக்குநர் பார்வையிட்டார். அதில், குழித்தட்டு முறையில் ஒரே பரு கரும்பு நாற்று விதை உற்பத்தி முறையையும் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது, கண்டமங்கலம் வேளாண் உதவி இயக்குநர் பெரியசாமி, வேளாண் அலுவலர்கள் சுப்புராஜ், ரமாதேவி, அப்பகுதி சர்க்கரை ஆலை அலுவலர் திலீப்குமார் மற்றும் விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com