மலட்டாறுக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி மறியல்: 50 விவசாயிகள் கைது

விழுப்புரம் மாவட்டம், அரசூர் அருகே மலட்டாறுக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி, சாலை மறியல் செய்ய முயன்றதாக கடலூர் மாவட்ட விவசாயிகள் 50 பேரை போலீஸார் கைது செய்தனர். 

விழுப்புரம் மாவட்டம், அரசூர் அருகே மலட்டாறுக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி, சாலை மறியல் செய்ய முயன்றதாக கடலூர் மாவட்ட விவசாயிகள் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தடுப்பணையில் தொடங்கி, அரசூர் வழியாகச் செல்லும் மலட்டாறு பண்ருட்டி அருகே கடலூர் மாவட்ட விவசாயிகள் பாசனத்துக்கும் பயன்பெற்று வருகிறது.
இதில், மலட்டாறின் கடைமடைபகுதியான கடலூர் மாவட்டம் நத்தம், சிறுகிராமம், திருவாமூர், வீரப்பெருமாநால்லூர், சேமக்கோட்டை, சிறுவத்தூர், எலந்தம்பட்டு, மணப்பாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட 9 கிராம ஏரிகளுக்கு பாசன வசதியின்றி கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகிறது.
சாத்தனூர் அணை நீர் தென்பெண்ணை ஆறு வழியாக வந்து, திருக்கோவிலூர் அருகே மலட்டாறில் பிரிந்து சென்று, மேற்கண்ட கிராமங்களுக்கு பாசன வசதியை அளித்து வருகிறது.
மலட்டாறில் தண்ணீர் வராததால், கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆறை நம்பியுள்ள விவசாயிகளுக்கு உரிய பாசன நீரை வழங்க வலியுறுத்தி, மக்கள் பாதுகாப்பு கவசம் சார்பில், அதன் நிர்வாகிகள் சேதுராஜன், தஷ்ணாமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்டோர் தலைமையில் விவசாயிகள் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச் சாலையில், இந்த அமைப்பினர் வியாழக்கிழமை விவசாயிகளுடன் மறியலில் ஈடுபட பண்ருட்டி சாலையிலிருந்து கோரிக்கை வலியுறுத்தி பேரணியாக வந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: மலட்டாறு மூலம் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில் தொடங்கி கடலூர் மாவட்டம், கொளப்பாக்கம் வரையுள்ள ஏரிப்பாசன விவசாயிகள் பலர் பயனடைந்து வருகின்றனர்.
கடைமடைப் பகுதிகளான மேற்கூறிய 9 கிராமங்களில் நெல் நடவு செய்து, கதிர் விளைந்து நிற்கிறது.
மலட்டாறில் தண்ணீர் வராததால், நிலத்தடி நீரும் பாதித்து, நெல் பயிர்கள் தண்ணீரின்றி காயும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மீதமுள்ள பயிர்களைக் காப்பதற்கு சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று, கடந்த நவம்பர் மாதத்திலிருந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
சாத்தனூர் அணையிலிருந்து நீரைப் பெற நடவடிக்கை எடுத்து வருவதாக விழுப்புரம் பொதுப் பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியரும், மலட்டாறு பாசனத்துக்கான 297 கனஅடி நீரை திறந்துவிட கோரிக்கை வைத்துள்ளார். மலட்டாறு பாசனத்துக்கு சாத்தனூர் அணை நீர் திறந்துவிட வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
முன்னதாக, இவர்கள் பண்ருட்டி சாலையில் பேரணியாக வந்து, விழுப்புரம் அருகே உள்ள அரசூர் தேசிய நெடுஞ்சாலை கூட்டுச் சாலையில் மறியல் செய்ய முயன்றபோது, விசாயிகள் 50 பேரை திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், வழியிலேயே ஆனத்தூரில் கைது செய்தனர்.


























































 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com