நூதன முறையில் லாரியில் மணல் கடத்தல்: ஓட்டுநர் கைது
By விழுப்புரம், | Published on : 13th January 2018 09:18 AM | அ+அ அ- |
கண்டமங்கலம் அருகே லாரியில் செங்கல்களின் அடியில் மறைத்து மணல் கடத்திய ஓட்டுநரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கண்டமங்கலம் சங்கராபரணி ஆற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதாக எஸ்.பி. ஜெயக்குமாருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.
எஸ்.பி.யின் தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெரியபாபுசமுத்திரம் பகுதியில் வாகன தணிக்கை செய்தபோது, அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட முயன்றனர். அந்த லாரியில் செங்கல் ஏற்றிச் செல்வதாக ஓட்டுநர் தெரிவித்தார்.
அதேபோன்று, லாரியின் பின்பக்கம் செங்கல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. எனினும், சந்தேகத்தின் பேரில் போலீஸார் செங்கல்களை எடுத்து சோதனையிட்டனர். அப்போது, அதன்கீழே மணல் மறைத்து வைத்து கடத்தப்படுவது தெரியவந்தது.
இது தொடர்பாக பெரியபாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அறிவழகன்(27) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.