அணிவகுத்த வாகனங்கள்: தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல்

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் புறப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்த வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் புறப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்த வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையொட்டி 12-ஆம் தேதி தொடங்கி வருகிற 16-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளித்துள்ளன. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை மாலையே செல்லத் தொடங்கினர். இதனால், விழுப்புரம் மாவட்ட சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியை முடுக்கிவிட்டார்.
இந்த நிலையில், சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சனிக்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. மேலும், கார்களிலும் பொதுமக்கள் பயணித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஓங்கூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது.
விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் சென்னையிலிருந்து இரு சக்கர வாகனத்திலேயே தங்கள் ஊர்களுக்குப் புறப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்பட்டது.
இதனால், சென்னை பெருங்களத்தூர் தொடங்கி பல இடங்களில் சென்னை-திருச்சி நான்கு வழிச்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான கார்கள், வாகனங்கள் அணிவகுத்துச் சென்றதால், திண்டிவனம், கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு, ஜானகிபுரம் புறவழிச் சாலை, அரசூர் கூட்டுச் சாலை போன்ற இடங்களில் சாலையை வாகனங்கள் கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதும், விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திருச்சி, சேலம்,
கடலூர், நெய்வேலி, கும்பகோணம் போன்ற இடங்களுக்குச் செல்ல போதிய பேருந்துகளின்றி உள்ளூர் பயணிகள் தவித்தனர். மேற்கண்ட ஊர்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com