ஆரோவிலில் வெளிநாட்டினர் கொண்டாடிய பொங்கல் விழா

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் வெளிநாட்டினர் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் வெளிநாட்டினர் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆரோவில் சர்வதேச நகரில் ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். மேலும், அருகே உள்ள புதுவைப் பகுதிக்கும் சுற்றுலா வருகை தந்து செல்கின்றனர்.
இவர்கள், ஆண்டுதோறும், ஆரோவில் பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர்.
இதேபோல, நிகழாண்டும் ஆரோவில் பகுதியில் வெளிநாட்டினர் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்.
அவர்கள் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடினர். இதில், ஆரோவில் பகுதியில் தங்கியுள்ள பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாட்டினரும், வெளி மாநிலத்தவர்களும் கலந்து கொண்டனர்.
இவர்கள் தமிழ் கலாசாரத்தின்படி வேட்டி, புடவைகளை அணிந்து, புதுப்பானை வைத்து, பொங்கலிட்டு கொண்டாடினர். அங்கு, பொங்கல் வைத்து வழிபட்ட தமிழர்களுக்கும் அவர்கள் தங்களது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
கல்வியல் கல்லூரியில்...: விழுப்புரம் திருப்பச்சாவடிமேடு வித்யோதயா கல்வியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு கல்வியல் கல்லூரி முன்னாள் துணை வேந்தர் ஜி.வி.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தார்.
கல்லூரியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோர் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கலை வரவேற்றனர். தொடர்ந்து, உறியடித்தல், கும்பிப்பாட்டு, கோலாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லூரி நிர்வாக அலுவலர் பி.வடிவேலு, கல்லூரி துணை முதல்வர் ஆர்.அய்யனார், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com