போகிப் பண்டிகைக் கொண்டாட்டம்: புகை மண்டலமான சாலைகள்!

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு கடும் பனிப் பொழிவுக்கு இடையே போகியைக் கொண்டாடியதால், சனிக்கிழமை காலை 7 மணி வரை சாலைகள் புகை மூட்டத்துடன் காணப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் கடும்

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு கடும் பனிப் பொழிவுக்கு இடையே போகியைக் கொண்டாடியதால், சனிக்கிழமை காலை 7 மணி வரை சாலைகள் புகை மூட்டத்துடன் காணப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
தமிழர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தைப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் தொடக்கமான பழையன கழிதலும், புதியன புகுதலுமான போகிப் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழுப்புரத்தில் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி, குடியிருப்புகள் மிகுந்த அனைத்து வீதிகளிலும், போகிப் பண்டிகையோடு பொங்கலை வரவேற்றனர். பழையனவற்றைப் போக்கும் விதமாக வீட்டில் இருந்த பழைய துணிகள், படுக்கைகள், நெகிழிப்பைகள், பயன்படுத்தாமல் முடங்கிய குடைகள் என அனைத்து வித குப்பைகளையும் போட்டு தீ வைத்து எரித்தனர்.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களாகப் பனி மூட்டம் தொடர்ந்திருந்த நிலையில், சனிக்கிழமை பனியின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இதனுடன், போகி கொண்டாட்டத்தின் புகை மூட்டமும் சேர்ந்ததால் குடியிருப்பு பகுதிகளிலும், சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - புதுவை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில், பனிமூட்டத்துடன் புகை மண்டலம் சேர்ந்ததால், சாலைகளில் இரண்டு அடுக்குகளாக பனியும், புகையும் மறைத்தபடி இருந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் எதிர்வரும் வாகனங்கள் தெரியாமல், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வந்தனர். இருந்த போதும் 10 அடி அளவுக்குக்கூட சாலை தெரியாததால் தவித்தபடி மெதுவாகவே சென்றனர்.
நெடுஞ்சாலைகளில் சென்ற லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் புகை மூட்டத்தால், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்பட்டன. காலை 8 மணிக்குப் பிறகே சாலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின.
புகையில்லாத போகியைக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலும், அதனைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் நெகிழிப்பைகள், குப்பைகளை எரித்து சுகாதாரச் சீர்கேட்டைத் தொடர்ந்ததால், புகை மூட்டம் ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், ஆண்டுதோறும் சுற்றுச் சூழலைப் பாதிக்காமல் நெகிழிப்பை, குப்பைகளை எரிக்காமல் போகியைக் கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தும் சுற்றுச்சூழல் துறை, நிகழாண்டு அதைப் பற்றிச் சிறிதும் விழிப்புணர்வை ஏற்படுத்தவோ, அறிவிக்கவோ இல்லாதது வேதனையளிப்பதாக பொதுநல விரும்பிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com