விழுப்புரம் பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள்: கண்காணிக்க ஏற்பாடுகள் தீவிரம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
 விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், புறநகர் பகுதியான பூந்தோட்டம் ஏரியில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2000-இல் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
 பேருந்து நிலைய முகப்புப் பகுதியில் நகர பேருந்து நிலையமும், இருசக்கர வாகன நிறுத்தும் மையமும் உள்ளது. நான்கு புறம் சுற்றிலும், புறநகர் பேருந்து நிலையமும், மையத்தில் 80 கடைகளும் அமைக்கப்பட்டு நகராட்சி சார்பில் பராமரிக்கப்படுகிறது.
 பேருந்து நிலையத்தில் ஒருபுறம் திறந்த வெளியாகவும், மறுபுறங்களில் சாலை இடைவெளியுடன் அருகே அரசுத்துறை அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இதனால், பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது.
 பயணிகளிடம் சட்டவிரோதமாக நடப்பவர்களை கண்காணித்து, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு வழியில்லாமல் உள்ளது.
 இது குறித்து நடவடிக்கை எடுக்க, சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
 விழுப்புரம் தாலுகா போலீஸாரும் புதிய பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
 பேருந்து நிலைய வியாபாரிகள் நலச் சங்கத்தினர், சிசிடிவி கேமரா அமைப்பதற்கான செலவினங்களை ஏற்பதாக அண்மையில் உறுதியளித்திருந்தனர்.
 இதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்தில், சிசிடிவி கேமராக்கள் பொருத்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், நகராட்சி ஆணையர் செந்திவேல் ஆகியோரின் அறிவுரையின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 இதற்காக, பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கம் சார்பில், 10 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பேருந்துகள் நுழைவு வாயில், பேருந்துகள் வெளியேறும் பகுதியில் 2 கேமராக்களும், சென்னை மார்க்க பேருந்துகள் நிற்குமிடத்தில் 2-ம், திருச்சி, கள்ளக்குறிச்சி பேருந்துகள் நிற்கும் இடத்தில் 2-ம், திருக்கோவிலூர்-புதுவை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 2-கேமராக்களும் பொருத்தப்படுகிறது.
 இந்தக் கேமராக்கள் அனைத்தும், பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இணைக்கப்பட்டு, கணினி வழியாக போலீஸார் பேருந்து நிலையப் பகுதியை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
 இதற்காக, எச்டி தொழில்நுட்ப தரத்தில், நிலையான 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
 புதன்கிழமை (ஜன.17) கண்காணிப்பு கேமராக்களை இயக்கிவைப்பதற்கான பணிகளை பேருந்து நிலைய வியாபாரிகள் நல சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com