கடற்கரையில் உயிரிழந்து வரும் அரிய வகை ஆலிவ்ரிட் ஆமைகள்!

தமிழக கடற்கரைப் பகுதிகளில் முட்டையிட கரை ஒதுங்கும் அரிய வகை ஆலிவ்ரிட்லி ஆமைகள் விசைப்படகு, மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்து
மரக்காணம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆலிவ்ரிட்− ஆமை. (வலது) மரக்காணம் வசவன்குப்பம் கடற்கரையில், வனத் துறையினரால் சேகரிக்கப்பட்டு, குஞ்சு பொறிக்க ஏதுவாக குழியில் வைக்கப்பட்டுள்ள ஆலிவ்ரிட்−
மரக்காணம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆலிவ்ரிட்− ஆமை. (வலது) மரக்காணம் வசவன்குப்பம் கடற்கரையில், வனத் துறையினரால் சேகரிக்கப்பட்டு, குஞ்சு பொறிக்க ஏதுவாக குழியில் வைக்கப்பட்டுள்ள ஆலிவ்ரிட்−

தமிழக கடற்கரைப் பகுதிகளில் முட்டையிட கரை ஒதுங்கும் அரிய வகை ஆலிவ்ரிட்லி ஆமைகள் விசைப்படகு, மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்து வருகின்றன. மீன் வளர்ச்சிக்கு உதவி புரியும் இந்த அரிய வகை ஆமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தெற்கு ஆசியப் பகுதிகளிலிருந்து வரும் ஆலிவ்ரிட்லி ஆமைகள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தமிழகம், புதுவை கடற்கரைப் பகுதிகளில் அதிகளவில் ஒதுங்கி குஞ்சு பொறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி ஆலிவ்ரிட்லி ஆமைகள் கிழக்கு கடற்கரையோர மணல் திட்டு பகுதிகளில் முட்டையிட்டுச் செல்கின்றன. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோட்டக்குப்பம் போன்ற பகுதிகளில் முட்டையிடுவதற்காக கரையொதுங்கும் ஆமைகள் கடந்த சில நாள்களாக வசைப்படகுகள், வலைகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றன. உயிரிழந்த ஆமைகளை வனத்துறையினர் மீட்டு புதைத்து வருகின்றனர். கடற்பாசி போன்ற மீன் உணவுகளை அதிகரித்து அபரிமிதமான மீன் வளர்ச்சிக்கு ஆலிவ்ரிட்லி ஆமைகள் உதவி புரிவதால், மீனவ சமுதாயத்தினர் சிலர், உயிரிழந்த ஆமைகளுக்கு இறுதிச் சடங்கு செய்து, அஞ்சலி செலுத்துவதும் நடைபெறுகிறது.

ஆமைகள் உயிரிழப்பு குறித்து விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் ராகுல், மரக்காணம் வனவர் அருண்ராஜ் ஆகியோர் கூறியதாவது: தமிழக கடற்கரை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை ஆலிவ்ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொறிக்கும். இதற்காக நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் கரைக்கு வரும் ஆமைகள், மீனவர்களின் விசைப் படகுகள், வலைகளில் சிக்குவதால், உயிரிழப்பு நேர்கிறது. ஓர் ஆமை 100 முதல் 150 முட்டைகள் வரை இடும்.

கரைப்பகுதிகளில் இடப்படும் ஆமை முட்டைகளை நாய், நரிகளிடமிருந்தும், மக்கள் நடமாட்டத்தாலும் சேதமாகாத வகையில், பாதுகாப்பாக எடுத்து, குஞ்சு பொறிக்கச் செய்யும் பணிகளை வனத் துறை செய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் பகுதியில் ஆலிவ்ரிட்லி ஆமைகள்அதிகளவு முட்டையிடுகின்றன. மரக்காணம் அருகே உள்ள வசவன்குப்பம், அழகன்குப்பம், எக்கியார்குப்பம் பகுதியில் இந்த முட்டைகளை சேகரித்து, குழிகளிட்டு, குஞ்சுபொறிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். நிகழ் ஆண்டு தற்போது, 9 இடங்களில் இதுவரை 1,080 முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டுள்ளது. இவைகள், குஞ்சு பொறித்தவுடன் பத்திரமாக மீட்டு, கடலில் விடப்படும். இதே போல, கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில்தான் அதிகளவாக 15 ஆயிரம் குஞ்சுகள் பொறிக்கப்பட்டு கடலில் விடப்பட்டன.

மீனவ தன்னார்வலர்களை வைத்தும் அதிகாலை நேரங்களில் முட்டைகளை சேகரித்து வருகிறோம். நிகழாண்டு குறைவான எண்ணிக்கையிலான ஆமைகளே உயிரிழந்துள்ளன. அவை, வலையில் சிக்கியும், விசைப்படகில் அடிபட்டும் இறந்துள்ளது ஆய்வில் தெரிந்தது.

விசைப் படகுகள் கடலோரப் பகுதியில் 5 கி.மீ. தொலைவுக்கு உள்ளே வராமல் மீனவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக, மீனவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com