ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் கைது

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கத்தினர்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
 இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ மாநில துணைச் செயலர் ஏ.வீராசாமி தலைமை வகித்தார். ஆர்.ஜீவா கண்டன உரையாற்றினார்.
 கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பி.கிருஷ்ணசாமி, சிஐடியூ மாவட்டத் தலைவர் பி.குமார், செயலாளர் ஆர்.மூர்த்தி, ஜெயசங்கர், மணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.
 குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.
 சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இவர்களுக்கு முறையான ஊதிய உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதியம் குறித்த அரசாணையை வெளியிட வேண்டும். மூன்றாண்டுகள் பணி முடித்த தொகுப்பூதிய துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும், உள்ளாட்சி மன்றங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும், ஊராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.
 இந்தப் போராட்டத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் கதவுகளை விழுப்புரம் தாலுகா போலீஸார் மூடி தடுப்பை ஏற்படுத்தியதுடன், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரையும் கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com