தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும்: நல்லகண்ணு

தமிழகத்தில் தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் இரா.நல்லகண்ணு வலியுறுத்தினார்.

தமிழகத்தில் தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் இரா.நல்லகண்ணு வலியுறுத்தினார்.
 விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு நீதி விசாரணை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம், விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இதில், பங்கேற்ற இரா.நல்லகண்ணு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 விழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புத்தூரில் சிறுவனை கொலை செய்து, அவரது தாய், தங்கையை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
 மேலும், பக்கத்து கிராமமான வசந்தகிருஷ்ணாபுரத்தில் தலித் இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க வலியுறுத்தி, அனைத்துக் கட்சியினர் போராடியும் நடவடிக்கை எடுக்காத, மாவட்ட காவல் துறையைக் கண்டிக்கிறோம்.
 திருச்சி அருகே பைக்கில் சென்ற தம்பதியைத் துரத்திச் சென்று, காவல் ஆய்வாளர் உதைத்ததில் கர்ப்பிணி இறந்த சம்பவத்தில் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். சென்னையில் மாணவி அஸ்வினி கொடூரக் கொலை, ஏற்கெனவே சுவாதி போன்ற கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
 தமிழகத்தில் தொடரும் சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் பெண்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் காவல் துறை செயல்படாமல் உள்ளது.
 போடி அருகே குரங்கணி மலையில் கடந்த 6 நாள்களாக காட்டுத் தீ எரிவது தெரிந்தும், மலையேற்ற பயிற்சிக்கு அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி உரிமை மறுக்கப்பட்டுள்ளபோதிலும் மாநில அரசு எதிர்த்து எதையும் செய்யவில்லை. மாநில உரிமைகள் பறிபோய் வருகின்றன. மத்திய அரசால் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. காவிரி நதி நீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு தயாரில்லை. ஆனாலும், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்படுகிறது. மக்கள் பிரச்னையில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என்றார்.
 முன்னதாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலச் செயலர்கள் சு.குமார், கே.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஆர்ப்பாட்டத்தை திமுக மாவட்டச் செயலர் க.பொன்முடிதொடக்கி வைத்துப் பேசினார். காங்கிரஸ் நகரத் தலைவர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் இரா.நல்லகண்ணு கண்டன உரையாற்றினார். திமுக மாவட்டத் தலைவர் கு.ராதாமணி, பொருளாளர் புகழேந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மதிமுக நகரச் செயலர் சம்மந்தம், விசிக மாவட்டச் செயலர் ஆற்றலரசு, கம்யூனிஸ்ட் (எம்எல்) மாவட்டச் செயலர் வெங்கடேசன், திக தலைவர் மு.தாஸ் உள்ளிட்டோர் பேசினர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com