ரயில்வே சுரங்கப் பாலங்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் ரயில் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, ஆளில்லாத கடவுப் பாதைகளை மூடி சுரங்கப் பாலங்கள் அமைக்கும் பணிகள்

தமிழகத்தில் ரயில் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, ஆளில்லாத கடவுப் பாதைகளை மூடி சுரங்கப் பாலங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்தகைய இடங்களில் வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ப அகலமான பாலங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வருகிற 2019-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதுமுள்ள 18,000 ஆளில்லாத கடவுப் பாதைகளை மூடவும், பிற கடவுப்பாதைகளுக்கு மேம்பாலம் போன்ற மாற்று கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் கடந்த 2015-ரயில்வே பட்ஜெட்டில் ரூ.6,581 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, 3,438 ஆளில்லா கடவுப் பாதைகள் மூடப்பட்டு, 917 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தெற்கு ரயில்வே சார்பில் திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், மன்னார்குடி, வேலூர், புதுவை உள்ளிட்ட ரயில்வே பாதைகளில் அமைந்துள்ள ஆளில்லாத கடவுப்பாதைகளை நிரந்தரமாக மூடி, அந்த இடங்களில், கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சுரங்கப்பாலங்களை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில், திருச்சி கோட்டத்துக்கு உள்பட்ட சென்னை-திருச்சி அகல ரயில் பாதையில், விழுப்புரம் அருகேயுள்ள சாலாமேடு கடவுப்பாதையில், சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுரங்கப் பாலத்துக்கான ஆயத்த கான்கிரீட் கட்டமைப்புகளை (ரெடிமேட் சிமென்ட் கர்டர்கள்) உருவாக்கும் பணியில், புதுவையைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரத்திலிருந்து பல்வேறு கிராமங்களை இணைக்கும் இந்த கடவுப்பாதையில், தலா 5 மீட்டர் உயரம், அகலத்துக்கு கான்கிரீட் பாலத்துக்கான கட்டமைப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அதன் பின்னர், ரயில்வே கடவுப்பாதையை அகற்றி, அதன் கீழ் சுரங்கப் பாதை ஏற்படுத்தப்பட்டு, அந்த இடத்தில் இந்த ஆயத்த கட்டமைப்புகளை வைத்து தலா 4.75 மீட்டர் உயரம், அகலத்தில் வழியுடன் பாலம் அமைக்கப்படும்.
அதன்பிறகு, கடவுப்பாதை மூடப்பட்டு, பாலத்துக்கு மேல் வழக்கம் போல் ரயில் போக்குவரத்து நடைபெறும். இந்தப் பணிகள் ஓராண்டில் நிறைவு பெறும் என என்று ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதே போல, விழுப்புரம் அருகே கொளத்தூர் ஆளில்லாத கடவுப்பாதை, கரடிப்பாக்கம் கடவுப்பாதை என உளுந்தூர்பேட்டை வரையுள்ள கடவுப்பாதைகளில் சுரங்கப் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
மேலும், விழுப்புரம்-புதுவை, விழுப்புரம்-காட்பாடி, விழுப்புரம்-மயிலாடுதுறை உள்ளிட்ட வழித்தடங்களிலும் கடவுப்பாதைகள் மூடப்பட்டு, சுரங்கப் பாலங்களை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 2019-க்குள் அனைத்து ஆளில்லாத கடவுப் பாதைகளையும் மூடத் திட்டமிட்டு, சுரங்கப் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதில், மாநில அரசின் அனுமதியையும் பெற வேண்டும் என்பதால் பணியில் காலதாமதம் ஏற்படுகிறது. திருச்சி கோட்டப் பகுதியில், சுமார் 100 ஆளில்லாத கடவுப்பாதைகள் மூடப்பட்டு, சுரங்கப் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.
வாகனப் போக்குவரத்துக்கேற்ற பாலங்கள் அவசியம்: இதனிடையே, கரும்பு டிராக்டர், கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கப் பாலங்களை உயரமாகவும், அகலமாகவும், மழை நீர் தேங்காத வகையிலும் திட்டமிட்டு அமைக்க வேண்டும் என்று அந்தந்தப் பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே, 4 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட இருந்த சுரங்கப்பாலங்கள், வாகன போக்குவரத்துக்கு ஏற்ப 6 மீட்டர் உயரம், அகலத்துக்கு அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியதன் பேரில், பரிசீலிக்கப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com