வீடூர் அணையைத் தூர்வார வலியுறுத்தல்

வறண்டு காணப்படும் வீடுர் அணைக்கு நீர்வரத்துக்கான திட்டப் பணியை மேற்கொள்வதோடு, அணையைத் தூர்வார வேண்டும் என்று அத்தொகுதி எம்எல்ஏ வலியுறுத்தினார்.

வறண்டு காணப்படும் வீடுர் அணைக்கு நீர்வரத்துக்கான திட்டப் பணியை மேற்கொள்வதோடு, அணையைத் தூர்வார வேண்டும் என்று அத்தொகுதி எம்எல்ஏ வலியுறுத்தினார்.
இதுகுறித்து, மயிலம் தொகுதி எம்எல்ஏ இரா.மாசிலாமணி, வீடூர் அணை விவசாயிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனு அளித்து கூறியதாவது:
வீடூர் அணைக்கு வாரக நதி, தொண்டி ஆறு மூலம் நீர்வரத்துள்ளது. பருமழை சரிவர பெய்யாததால், இரு ஆறுகளிலும் போதுமான அளவு நீர்வரத்தின்றி அணை தன்கொள்ளளவை எட்டி பல ஆண்டுகளாகின்றன.
இதனால், வீடூர் அணைக்கு நீர் வரத்தை அதிகரிக்க தென்பெண்ணை ஆற்றிலிருந்து உயர்மட்ட கால்வாய் அமைத்து, நந்தன் கால்வாயில் இணைத்து, வராக நதிக்கு தண்ணீர் கொண்டுவர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரூ.450 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட இந்தத் திட்டம் ஆய்வு நிலையிலேயே உள்ளது.
இதனால், குறைந்த மதிப்பீட்டில் வராக நதிக்கு மாற்றுத் திட்டத்தில் தண்ணீர் கொண்டுவர வேண்டும். இதன்படி, ஆண்டு தோறும் நிரம்பி வழியும் செஞ்சி வட்டம், சென்னாலூர் ஏரியை அணைக்கட்டாக உயர்த்திக் கட்டினால், மழைக் காலங்களில் சேரும் நீர் கால்வாய் வழியாக சென்னாலூர் வாய்க்காலிலிருந்து, தண்ணீர் கோணை அணைக்கட்டுக்கு சென்று, அங்கிருந்து ஒரு வாய்க்கால் மூலம் பொன்பத்தி ஏரிக்குச் செல்லும்.
இதனால், பொன்பத்தி ஏரியிலிருந்து வரும் தண்ணீரை வாய்க்கால் வழியாக வராக நதிக்கு கொண்டு செல்ல முடியும். இதன் மூலம், வீடுர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை தனது முழுக் கொள்ளளவை எட்டும்.
குறைந்த மதிப்பிலான இந்தத் திட்டத்தை, அரசு ஆய்வு செய்து செயல்படுத்த வேண்டும். மேலும், வராக நதி உற்பத்தியாகும் மேல்மலையனூர் ஏரியை தூர்வாரினால் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும்.
அணையை தூர்வார வேண்டும்:
வீடூர் அணையின் மொத்த நீளம் 4,500 மீட்டர், உயரம் 32 அடி, கொள்ளளவு 605 மில்லியன் கனஅடியாகும். அணையின் பிரதான கால்வாய் நீளம் 17,640 கிலோ மீட்டராகும். 5 கிளை வாய்க்கால்கள் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், வானூர் வட்டங்களில் 2,200 ஏக்கர் நிலங்களும், புதுவை மாநிலத்தில் 1,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.
இந்த அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகளாகின்றன. அணையின் நீர்பிடிப்புப் பகுதி தூர்வாராமல் உள்ளதால், கொள்ளளவு குறைந்துள்ளது. இதனால், அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அணையின் பிரதான பாசன வாய்க்காலையும், கிளை வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்றார். வீடூர் அணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.மணவாளன், முன்னாள் தலைவர்கள் சிறுவை ராமமூர்த்தி, ஆர்.ராஜேந்திரன், எம்.ரவி, டி.விஸ்வநாதன், எஸ்.ரமேஷ், வி.முருகன் உள்ளிட்ட விவசாயிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com