வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, சிறப்பு சுருக்க திருத்த முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, சிறப்பு சுருக்க திருத்த முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கடந்த செப்.1-ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
அலுவலக நாள்களில் மட்டும் இதற்கு மனு அளிக்க முடியும் என்பதால், விடுமுறை நாளில் மனு அளிக்கும் வகையில் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
  மாவட்டத்தில் உள்ள 3,227 வாக்குச்சாவடிகளுக்கு உள்பட்ட அனைத்து மையங்களிலும் நடைபெற்ற இந்த முகாமில் இளம் வாக்காளர்கள் உள்பட ஏராளமானோர்  மனுக்களை அளித்தனர். 
காலை 9.50 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், மாவட்ட முழுவதும் சுமார் 15 ஆயிரம் பேர் வரை மனு அளித்தனர். 
வரும் 23-ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சீனுவாசன் தெரிவித்தார். 
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியை அடுத்த எசலாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற வாக்காளப் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா நேரில் ஆய்வு செய்தார். 
இதேபோன்று, கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் உள்ள எம்.ஆர்.ஐ.சி. கோலியனூர் தொடக்கப் பள்ளி, சிறுவந்தாடு அரசுப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாம்களை மாநிலங்களவை  உறுப்பினரும், அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான இரா.லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தார்.
செஞ்சி
செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப் பணிகளை செஞ்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலருமான பிரகாஷ்வேல் நேரில் ஆய்வு செய்தார். 
ஆய்வின் போது செஞ்சி வட்டாட்சியர் எஸ்.ரங்கநாதன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், வாக்குச்சாவடி அலுவலர் அஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  
திண்டிவனம்
திண்டிவனம் நகரில் உள்ள வாக்குச்சாவடி மையங்களான புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, வால்டர் ஸ்கடர், நேஷனல், புனித பிலோமினாள் மேல்நிலைப் பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாம்களில் திண்டிவனம் சார்-ஆட்சியர் மெர்சிரம்யா நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு, அலுவலர்களிடம் ஆய்வு  செய்தார்.
திண்டிவனம் வட்டாட்சியர் பிரபுவெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com