கல்வராயன்மலையில் பள்ளி வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநர் சாவு: 16 மாணவர்கள் காயம்

விழுப்புரம் மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற

விழுப்புரம் மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். 16 மாணவர்கள் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கருமந்துரை பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியைச் சேர்ந்த வேன் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம் மாவட்டம்,  சின்னசேலம் வட்டத்தைச் சேர்ந்த இன்னாடு பகுதியிலிருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. வேனை இன்னாடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் வெங்கடேசன் (35) ஓட்டினார்.
மொட்டையனூர் பிரிவு சாலை அருகே சென்றபோது,  வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி ஓடி, மலைப் பகுதியில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநர் வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வேனில் பயணித்த வெள்ளேரிக்காடு பகுதியைச் சேர்ந்த சிவராஜ் (12), பாலாஜி (10), ஹரிகிருஷ்ணன் (5), பானுப்பிரியா (19), கோபிகா (5), ஹரிதாஸ் (4), தினேஷ்(7), வெற்றிச்செல்வன்(6). இன்னாடு பகுதியைச் சேர்ந்த சுதேஷ் (4), தமிழினியன் (13), ஹெமன் (10), தர்ஷன் (8), தினேஷ் (6), பிரியதர்ஷன் (5), காவியா (5), சந்தோஷ்குமார் (4) உள்ளிட்ட 16 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
அவர்கள் மாவடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் த.ரஜினிகாந்த் தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று அவர்களை சமாதானம்  செய்து சாலை மறியலை கைவிடச் செய்தனர். விபத்து குறித்து கரியாலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com