கறவை மாடுகள் வளர்ப்பில் லாபம் அடைவதற்கான வழிமுறைகள்!

பொருளாதார ரீதியாக லாபம் அடைய, கறவை மாடுகளில் ஆண்டுக்கு ஒரு கன்றை பெறுவதன் அவசியம் குறித்தும், அதற்கான வழிமுறைகள் பற்றியும், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக
கறவை மாடுகள் வளர்ப்பில் லாபம் அடைவதற்கான வழிமுறைகள்!

திண்டுக்கல்: பொருளாதார ரீதியாக லாபம் அடைய, கறவை மாடுகளில் ஆண்டுக்கு ஒரு கன்றை பெறுவதன் அவசியம் குறித்தும், அதற்கான வழிமுறைகள் பற்றியும், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (திண்டுக்கல்) உதவிப் பேராசிரியர் மூ.தாஸ்பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
ஆண்டுக்கு ஒரு கன்று என்ற இலக்கு, மாடு வளர்ப்போருக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் மாடுகள் சினை பிடிப்பதில் உள்ள குறைபாடுகள். அதனால் ஒரு மாட்டின் வாழ்நாளில் அதிகமாக 6 முதல் 8 கன்றுகள் ஈனுதல் மட்டுமின்றி, மொத்தப் பால் உற்பத்தியும் குறைந்து விடுகிறது. 
சினை பிடிக்காமைக்கான காரணங்கள்: சினைப் பருவ அறிகுறிகளைக் கண்டறியாமல் இருப்பதும், சரியான நேரத்தில் சினை ஊசி போடாததும், சரியான பருவத்தில் இல்லாத மாடுகளைச் சினையூட்டுவதும், மாடுகள் சினையாகாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
அதேபோல், தரமற்ற விந்து திரவம், குறைந்த எண்ணிக்கையிலான விந்து செல்கள், முறையற்ற சினை ஊசி போடும் முறை மற்றும் இனப்பெருக்கத் திறன் குறைந்த பொலிகாளைகளை இனப் பெருக்கத்திற்குப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களும் உள்ளன. மேலும், மாடுகளில் கருப்பை அழற்சி, கருப்பை உள்சுவர் அழற்சி மற்றும் யோனியில் ஏற்படும் அழற்சி, உள்சுரப்பிநீர் உற்பத்தியில் காணப்படும் முரண்பாடுகள், சூலகத்தில் நீர்க்கட்டிகளும், காலந்தாழ்ந்த கருமுட்டை வெளிப்படுதலாலும் மாடுகள் சினையுறுதலில் தடை ஏற்படுகிறது. கருக்குழாயில் ஏற்படும் அடைப்பு, குறைபாடுடைய கருமுட்டை, மாடுகளில் இனப்பெருக்க உறுப்புக் குறைபாடுகள் மற்றும் இளங்கருச் சிதைவு ஆகியவற்றாலும் பாதிப்புகள் உள்ளன.
கறவை மாடுகளில் கருத்தரித்தல் நடைபெறாதது, கருச்சிதைவு ஆகியவற்றினால், நீண்ட காலமாக சினையுறாமல் திரும்ப திரும்ப சினைப் பருவத்துக்கு வருவது மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்.
மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்: மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் காரணிகளில் மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யப்படும் தருணம் மிக முக்கியமானது. மாடுகளில் காலையில் சினைப் பருவ அறிகுறிகள் தென்பட்டால் மாலையிலும், மாலையில் அறிகுறிகள் தென்பட்டால் அடுத்த நாள் காலையிலும் செயற்கைமுறை கருவூட்டல் செய்ய வேண்டும். பொதுவாகக் கறவை மாடுகள் சினைப் பருவ அறிகுறிகளை 8 முதல் 24 மணி நேர அளவுக்கு வெளிப்படுத்தும், ஆனால் சில மாடுகள் 2 நாள்களுக்கு கூட சினைப்பருவத்தை வெளிப்படுத்தும். இந்த வகையான மாடுகளுக்கு 2 நாள்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்ய வேண்டும்.
செயற்கை முறை கருவூட்டலின் போது நல்ல தரமான விந்துவினை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் கருத்தரித்தல் நடைபெறாது. செயற்கை முறை கருவூட்டல் செய்வதற்கு மாடுகளை நீண்ட தொலைவுக்கு ஓட்டிச் செல்லக் கூடாது. சினைப் பருவத்தில் உள்ள பசுக்களுக்கு நண்பகலில் செயற்கைமுறை கருவூட்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகம் வெப்பமானது உறைவிந்து குச்சிகளை பாதித்து அதனால் கருத்தரித்தல் நடைபெறுவது தடைபடும். 
பொதுவாக காலை அல்லது மாலை நேரங்களில் செயற்கைமுறை கருவூட்டல் செய்வது கருத்தரித்தலை அதிகரிக்கும். கறவை மாடுகளை பொலிகாளைகளுக்கு சேர்ப்பதை விட செயற்கை முறை கருவூட்டல் செய்வது கருத்தரித்தலை அதிகரிக்கும். கருவூட்டல் செய்த மாடுகளை வேகமாக ஓட்டி செல்லவோ, அடிக்கவோ கூடாது. 10 முதல் 15 நிமிடங்கள் கட்டி வைத்துப் பிறகு ஓட்டிச் செல்ல வேண்டும்.
கருவூட்டல் செய்த மாடுகளுக்கு நல்ல சத்தான சரிவிகித உணவினை அளிக்க வேண்டும். இல்லையெனில் ஊட்டச்சத்து குறைவினால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. கருவூட்டல் செய்த மாடுகளை தலையை தூக்கி கட்டிவைத்தாலும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அவற்றை 60 நாள்கள் கழித்து சினை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நீண்ட காலமாக சினையுறாமல் இருக்கும் மாடுகளில் சில சமயம், கருப்பையில் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கும். அவற்றுக்கு கால்நடை மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற வேண்டும்.
ஆண்டுக்கொரு கன்று ஈனுவதற்கான வழிமுறைகள்: சிறந்த முறையில் இனப் பெருக்கம் மற்றும் மேலாண்மை முறைகளை பின்பற்றினால் மட்டுமே இன்றைய சூழலில், ஆண்டுக்கு ஒரு கன்றினை மாடுகள் ஈன முடியும். மாடுகளின் சினைக்காலம் 270 முதல் 285 நாள்கள். இதனை மாற்றம் செய்ய முடியாது. ஆனால் கன்று ஈனியதிலிருந்து சினைப்பருவத்திற்கு வரும் காலத்தை மாற்ற முடியும். கன்று போட்டதில் இருந்து 45 நாள்களுள் முதல் சினைப் பருவ அறிகுறிகள் தென்பட்டால், முதல் சினைப் பருவத்தை தவிர்த்து அடுத்து 18 முதல் 21 நாள்களில் வரும் சினைப்பருவத்தில் சினை ஊசி போட்டால் ஆண்டுக்கு ஒரு கன்றினை உறுதியாக பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com