மழை வெள்ளத்தால் பாதிப்பு: நெற்பயிர்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைப் பாதுகாக்க மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம்
மழை வெள்ளத்தால் பாதிப்பு: நெற்பயிர்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள்


நீடாமங்கலம்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைப் பாதுகாக்க மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.பாஸ்கரன் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது:
வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் நெற்பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் கீழ்க்கண்ட மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்கலாம்.
பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல்: நெற்பயிர் மூழ்கியிருக்கும் பகுதிகளில், இளம்பயிரில் நட்ட குத்துகள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், அதே ரக நாற்றுகள் கொண்டு நடவு செய்து பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். 
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கான உர மேலாண்மை:
1. ஆரம்ப நிலை: வடிகால் வசதியுடைய இடங்களில், வயலில் தேங்கிய நீரை உடனடியாக வடித்தபின்பு மேல் உரமாக ஏக்கருக்கு அமோனியா குளோரைடு 42 கிலோ அல்லது அமோனியம் சல்பேட் 50 கிலோ அல்லது யூரியா 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம்புண்ணாக்கு 4 கிலோவை கலந்து, 24 மணிநேரம் வைத்திருந்து பின்பு பொட்டாஷ் 17 கிலோ கலந்து இடவேண்டும். இவ்வாறு செய்யும்பட்சத்தில் ஊட்டச்சத்து விரயம் குறைந்து, வளர்ச்சிக்கு உடனடியாக வாய்ப்புள்ளது.
2. மத்திய நிலை: தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் பயிர் பாதியளவு நீரில் மூழ்கியிருக்கும் நிலையில், பயிர் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாற வாய்ப்புள்ளது. இதனால், துத்தநாகம் மற்றும் தழைச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்கு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியாவும், 1 கிலோ சல்பேட்டும் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலுரம் இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. சூல் மற்றும் பூக்கும் பருவம்: சூல் மற்றும் பூக்கும் பருவத்திலுள்ள சம்பா நெற்பயிர்களைக் காக்க ஏக்கர் ஒன்றுக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 20 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் வடிகட்டி இந்தக் கரைசலுடன் 2 கிலோ பொட்டாஷ் 180 லிட்டர் நீருடன் கலந்து, மாலை வேளையில் இலைவழி உரமாக கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும். இவ்வாறு மற்றொரு முறை பூக்கும் தருணத்தில் இலைவழி உரமிட வேண்டும்.
பூச்சி மற்றும் நோய் பராமரிப்பு:
பயிர்களில் பூச்சி மற்றும் நோயின் அறிகுறிகள் காணப்பட்டால், கீழ்க்கண்ட பயிர் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
1. குருத்துப்பூச்சி: பொருளாதார சேத நிலை அளவு 10 சதவீத குருத்து காய்தல் அல்லது 2 முட்டை குவியல், காணப்பட்டால் குளோரோடேரேனிலிபுருள் 18.5 எஸ்.சி. 60 மில்லி., ஏக்கர் (அ) புளுபென்டிமைட் 39.35 எஸ்.சி. 20 மில்லி , ஏக்கர் தெளிக்கவும். முட்டைக் குவியல் தென்படும் சமயத்தில் முட்டை ஒட்டுண்ணி டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம் ஏக்கருக்கு 2 சி.சி. அளவில் தொடர்ந்து 2 முறை ஒரு வார இடைவெளியில் விடவும்.
2. இலைச்சுருட்டுப் புழு: பொருளாதார சேத நிலையான வளர்ச்சிப் பருவத்தில், 10 சதவீதம் பாதித்த இலைகளும், பூக்கும் தருணத்தில் 5 சதவீதம் பாதித்த இலைகளும் காணப்பட்டால், குளோரிபைரிபாஸ் 20 இசி 500 மில்லி, ஏக்கர் (அ) குளோரோடேரேனிலிபுருள் 18.5 எஸ்.சி. 60 மில்லி., ஏக்கர் (அ) புளுபென்டிமைட் 39.35 எஸ்சி 20 மில்லி, ஏக்கர் தெளிக்கவும். விளக்குப் பொறியில் அந்துப்பூச்சிகள் கவரப்படும்போது டிரைகோகிரம்மா கிலோனிஸ் ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சி.சி. அளவில் தொடர்ந்து 3 முறை ஒரு வார இடைவெளியில் விடவும்.
3. கூண்டுப்புழு: நடவு வயலில் 1 லிட்டர் மண்ணெண்ணெயை 3 கிலோ மணலுடன் கலந்து சமமாகத் தூவியபின், ஒரு கயிற்றை வயலின் இரு ஓரங்களிலும் இருவர் பயிரின் பாதி உயரத்தில் பிடித்துக் கொண்டு நடந்தால், கூண்டுப்புழுக்கள் அனைத்தும் வயலில் உள்ள நீரில் விழுந்து அழிந்துவிடும் அல்லது ஏக்கருக்கு மானோகுரோட்டாபாஸ் 36 எஸ்.எல். 400 மில்லி., மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவும்.
4. புகையான்: ஒரு தூருக்கு ஒரு தத்துப்பூச்சி என்ற பொருளாதார சேத நிலையில் இருந்தால், இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். 50 மிலி., ஏக்கர் அல்லது பைப்ரினில் 5 எஸ்.சி 500 மி.லி., ஏக்கர் தெளிக்கவும்.
5. பச்சை தத்துப்பூச்சி: குத்துக்கு 5 தத்துப்பூச்சிகள் தழைப்பருவத்தில் (அ) பூக்கும் பருவத்தில் 10 தத்துப்பூச்சிகள், குத்து என்ற பொருளாதார சேத நிலையில் இருந்தால், இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். 50 மிலி, ஏக்கர் அல்லது பைப்ரினில் 5 எஸ்.சி., 500 மிலி, ஏக்கர் தெளிக்கவும். மேலும், இந்த தத்துப்பூச்சி, துங்ரோ என்ற வைரஸ் நோயைப் பரப்பக்கூடியது.
6. ஆனைக்கொம்பன் ஈ: பொருளாதார சேத நிலை 10 சதவீத வெங்காய இலைகள் காணப்பட்டால், தையமீத்தாக்சம் 25 யுயுசி- 40 கிராம், ஏக்கர் (அ) பைப்ரினில் 5 எஸ்சி 500 மில்லி., ஏக்கர் தெளிக்கவும்.
7. குலைநோய்: குலைநோயின் பாதிப்பு தென்பட்டால், ஏக்கர் ஒன்றுக்கு சூடோமோனாஸ் எதிர் உயிர் பாக்டீரியா 1 கிலோ அல்லது கார்பெண்டாசிம் 200 கிராம் அல்லது டிரைசைகுளோசோல் 200 கிராம் என்ற பூஞ்சாண மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து, கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.
8. பாக்டீரியா இலைக்கருகல் நோய்: நோயின் அறிகுறி காணப்பட்டவுடன் தழைச்சத்து உரம் இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் 20 சதவீதம் பசுஞ்சாணக் கரைசல் அதாவது 40 கிலோ புதிய சாணத்தை 100 லிட்டர் நீரில் கரைத்து, 12 மணிநேரம் ஊறவைத்து பின்பு, தெளிந்த நீரை வடித்து இத்துடன் 100 லிட்டர் நீரை கலந்து 200 லிட்டராக்கி தெளிக்கவும் அல்லது ஏக்கருக்கு சூடோமோனாஸ் 1 கிலோ அல்லது
ஸ்ட்ரெப்டோமைசீன் சல்பேட்டுடன் டெட்ராசைக்கிளரின் கலந்த மருந்துக் கலவை 120 கிராமுடன், காப்பர் ஆக்ஸி குளோரைடு 300 கிராம் என்ற அளவில் நீருடன் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
எனவே, வேளாண் தொழில்நுட்பங்களை நெற்பயிரின் சேத நிலைக்கேற்ப தெளிவு செய்து, இருக்கும் பயிரைக் காப்பாற்றலாம் என்றார் ஆ. பாஸ்கரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com