நெற்பயிரை தாக்கும் இலைமடக்குப் புழுக்களைக் கட்டுப்படுத்த...

நெற்பயிரைத் தாக்கும் இலைமடக்குப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து திருச்செந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர்
நெற்பயிரை தாக்கும் இலைமடக்குப் புழுக்களைக் கட்டுப்படுத்த...


திருச்செந்தூர்: நெற்பயிரைத் தாக்கும் இலைமடக்குப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து திருச்செந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள வேளாண் செய்திக்குறிப்பு: 
திருச்செந்தூர் வட்டாரத்தில் நடவு செய்யப்பட்ட, வளர்ச்சிப் பருவத்தில் உள்ள நெற்பயிரில் பரவலாக இலைமடக்குப் புழு தாக்குதல் காணப்படுகிறது. இப்புழுக்கள் நெற்பயிரின் தோகைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து, அதற்குள் இருந்துகொண்டு பச்சையத்தைச் சுரண்டித் தின்னும். தோகைகளை பிரித்துப் பார்த்தால் புழுக்களும், அவற்றின் கழிவுகளும் காணப்படும். இவை சுரண்டித் தின்பதால் தோகைகளில் வெள்ளைநிறக் கோடுகள் காணப்படும்.
பொதிப் பருவத்தில் இலைமடக்குப்புழு தாக்குதல் ஏற்பட்டால் மகசூல் குறையும். வயலில் வெள்ளை நிற தாய்ப்பூச்சிகள் ஆங்காங்கே பறந்துகொண்டிருக்கும். இலைமடக்குப் புழுவைக் கட்டுப்படுத்த வயல் வரப்புகளைச் சீராக்கி சுத்தமாகவும், புல்லினக் களைகளின்றியும் பராமரிக்க வேண்டும். அதிகளவு தழைச் சத்து உரமிடுவதைத் தவிர்க்க வேண்டும். பூச்சிகள் மீண்டும் புத்துயிர் பெறுதலைத் தடுக்க கார்போபியுரான் அல்லது போரேட் குருணைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியை வயலில் பயிர் நடவு செய்த 37, 44, 51 ஆகிய 3 நாள்களில் ஹெக்டேருக்கு 5 சி.சி. (ஒரு லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்) என்ற அளவில் காலை நேரத்தில் வயலில் கட்டவும். 
மேலும் உளுந்து, தட்டைப்பயறு முதலான பயறுவகைப் பயிர்களை வரப்புப் பயிராகப் பயிரிடுவதன் மூலம் நன்மை செய்யும் பொறி வண்டுகள் உற்பத்தியாகி, நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும். விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அவற்றை அழிக்கலாம். வயலில் பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் பூச்சிகளை உண்ணும் பறவைகள் நிற்க ஏதுவாக பறவைத் தாங்கிகளை வைக்க வேண்டும்.
பொருளாதார சேத நிலை அளவைப் பொறுத்து ஹெக்டேருக்கு குளோரான்ட்ரானிலிப்ரோல் 150 மி.லி. அல்லது கார்ட்டாப் ஹைட்ரோகுளோரைடு ஒரு கிலோ தெளித்து இலைமடக்குப் புழுக்களைக் கட்டுப்படுத்தி மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com