கத்திரியில் கூன் வண்டு மேலாண்மை

கத்திரியில் கூன் வண்டு மேலாண்மை

கத்திரி பயிரைத் தாக்கும் கூன் வண்டை நன்மை செய்யும் நூற்புழுக்களைக் கொண்டு கட்டுப்படுத்தலாம் என கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் சுந்தராஜ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி: கத்திரி பயிரைத் தாக்கும் கூன் வண்டை நன்மை செய்யும் நூற்புழுக்களைக் கொண்டு கட்டுப்படுத்தலாம் என கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் சுந்தராஜ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கத்திரி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்களில் கடந்த இரு ஆண்டுகளாக கூன் வண்டு தாக்குதலால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இத்தகைய நிலையில், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,800 ஏக்கர் பரப்பளவில் கத்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிர்களில் குறிப்பாக கூன் வண்டுகளின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
சாம்பல் கூன் வண்டு: கோடை காலத்தில் சாம்பல் கூன் வண்டின் புழுக்கள், பயிரின் வேர் பகுதியைத் தாக்கியும், இலைகளைக் கடித்தும் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தும். இதனால், மகசூல் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது.
சாம்பல் கூன் வண்டின் புழுக்கள் வேர்களைக் கடித்துச் சேதப்படுத்துவதால் செடியானது விரைவில் காய்ந்துவிடும். அத்துடன் அதிக அளவில் பூச்சி மருந்துகளைத் தெளிப்பதன் மூலமும் ஒரு சில புழுக்கள், வண்டுகள் அதிக எதிர்ப்புத் திறன் பெற்று விடுகின்றன.
பூச்சின் தன்மை: கூன் வண்டு புழுக்கள் சிறியதாகவும், கால்கள் அற்றும் காணப்படும். கூன் வண்டானது செடியின் அடிப்பகுதியில் 500-க்கும் அதிகமான முட்டைகளை இடும். ஒரு வாரத்தில் முட்டையிலிருந்து வெளி வரும் புழுக்கள் செடியின் வேர்பகுதிகளைச் சேதப்படுத்தும்.
இந்தப் புழுக்கள் 60 முதல் 75 நாள்களில் கூட்டுப் புழுக்களாக மாறி 10 முதல் 12 நாள்களில் கூன் வண்டாக வெளிவரும். சிற்றினத்துக்கு ஏற்ப இந்த வண்டின் நிறம் புழுப்பு நிறமாகவே காணப்படும்.
கூன் வண்டின் மேலாண்மை: கூன் வண்டுகளை அழிப்பதால், புழுக்களின் தாக்கம் பயிர்களுக்கு வெகுவாகக் குறைகின்றன. கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 500 கிலோ வேப்பம் புண்ணாக்கினைச் சேர்த்து உழவு செய்ய வேண்டும்.
மேலும், நன்மை செய்யும் நூற்புழுக்களை ஹெக்டேருக்கு 8 கிலோ வீதம் நிலத்தில் இட வேண்டும். 
நன்மை செய்யும் நூற்புழுக்களை (இ.பி.எண்) 8 கிலோவை, 50-100 கிலோ கிராம் ஈரம் செய்யப்பட்ட தென்னை நார் துகள்களுடன் கலக்க வேண்டும். பின்னர், இவற்றை கைப்பிடி அளவு எடுத்து ஒவ்வொரு செடியிலும் நடவு செய்த 45 நாள்களில் வேர் பகுதிகளில் இட வேண்டும்.
வேண்டுகோள்: கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூன் வண்டு தாக்குதலுக்கு உள்ளான பயிர்களைப் பார்வையிட்டு, அவற்றை கட்டுப்படுத்துவது குறித்தும், நன்மை செய்யும் நூற்புழுக்கள் குறித்தும் விவசாயிகளுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பூச்சியியல் துறையின் முதன்மை விஞ்ஞானி நாகேஷ் செயல் விளக்கம் அளித்தார்.
அப்போது, அவர் கூறியது:
இந்த நூற்புழுக்கள் இயற்கை வேளாண்மைக்கு ஊக்கியாக இருக்கும். கூன் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் நன்மை செய்யும் நூற்புழுக்களை நான் கண்டறிந்தேன். தனியார் விற்பனை மையங்களில் இந்த நூற்புழுக்கள் விற்பனைக்கு உள்ளன. தரமற்ற நூற்புழுக்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் குறித்து தகவல் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தலைவர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், வேளாண் அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 04343-290639, 9443888644 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com