பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் அவசியம்

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் அவசியம் சேர வேண்டும் என, வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் அவசியம்

திருநெல்வேலி: பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் அவசியம் சேர வேண்டும் என, வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை முன்னாள் இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் கூறியது:
வாழும் போதும், வாழ்கைக்கு பின்னரும் என்ற காப்பீடு விளம்பரம் பார்த்திருப்போம். விதைக்கும் முன்னரும், அறுவடைக்கு பின்னரும் காப்பீடு செய்யலாம் என பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தெரிவிக்கிறது.
ஒரு பருவத்தில் மழை குறைந்து அல்லது மோசமான பருவ நிலையால் விவசாயிகளால் விதைக்க அல்லது நடவுசெய்ய முடியவில்லை எனில் இழப்பீடு பெறலாம். விதைப்பு முதல் அறுவடை வரையிலான காலத்தில் ஏற்படும் தவிர்க்க முடியாத மகசூல் இழப்புகளுக்கு காப்பீடு பெறலாம். அதாவது, வறட்சி, மழையின்மை, வெள்ளம், நீரில் மூழ்குதல், பூச்சி, நோய், நிலச்சரிவு, இயற்கையான தீ, மின்னல், இடி, புயல், மழை, சூறாவளி போன்றவற்றால் ஏற்படும் இழப்புக்கு காப்பீடு பெறலாம்.
அறுவடைக்கு பிந்தைய இழப்பு 
அறுவடை நாளிலிருந்து 2 வாரங்களுக்குள் ஏற்படும் இழப்புகள் அறுவடைக்கு பிந்தைய இழப்பாகும். பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வயலில் கிடக்கும்போது ஏற்படும் சூறாவளி, காற்றுடன் மழை, பருவம் தவறிய மழை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டால் நிவாரணம் பெறலாம்.
அரசால் அறிவிக்கப்பட்ட ஊர் அல்லது பகுதியில் உள்ள தனி ஒருவரின் பண்ணையில் சூறாவளி, நீரில் மூழ்குதல், நிலச்சரிவு போன்றவை விளைவிக்கும் பாதிப்பும் ஈட்டுறுதித் தொகை பெறத் தகுதியானது.
யாரெல்லாம் பயன் பெறலாம்?
விவசாயிகள் அனைவரும், அதாவது பயிர்க் காப்பீடு செய்யும் விவசாயி, குத்தகை விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடையலாம். அந்த விவசாயி அரசால் அறிவிக்கப்பட்ட பயிர், பகுதியில் சாகுபடி செய்திருக்க வேண்டும். பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் கட்டாயம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர்.
கடன் தொகையைப் பொறுத்து பிரீமியம் வசூலிக்கப்படும். அதற்குரிய ஆவணத்தை விவசாயிகள் வங்கிகளில் பெற வேண்டும். கடன் பெறாத விவசாயிகள் நில உரிமை குறித்த பட்டா, அடங்கல் போன்ற வருவாய்த் துறை சான்றுகள், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றைக் கொடுத்து பிரீமியம் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம்.
பிரீமியம் தொகையை பொது சேவை மையங்களில் செலுத்தலாம். பயிருக்கேற்ப பிரீமியம் தொகை மாறுபடும். ரூ. 500 பிரீமியம் செலுத்தினால் ரூ. 25 ஆயிரம் இழப்பீடு கிடைக்கும். விவசாயிகள் தங்கள் ஊர், சாகுபடி செய்யும் பயிர் ஆகியவை அரசின் காப்பீடு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளனவா என, வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டு அறியலாம். கார் பருவத்தில் ஜூலை 30-க்குள் காப்பீடு செய்ய வேண்டும்.
நிலத்தை கிரையம் பெற்ற விவசாயிகள் தங்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும். உரிமையாளர் பெயரில் பட்டா இல்லையெனில் இத்திட்டத்தில் சேர முடியாது. விவசாயி சாகுபடி செய்கிறார் என்பதை கிராம நிர்வாக அலுவலர்தான் சான்றளிக்க வேண்டும். பதிவு செய்த குத்தகைதாரர் மட்டுமே சான்று பெறத் தகுதியானவர். மற்றவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் விரும்பினால் தரலாம். அவரைக் கட்டாயப்படுத்த முடியாது.
20 ஹெக்டேருக்கு அதாவது 50 ஏக்கருக்கு மேல் ஒரு கிராமத்தில் பயிர் சாகுபடி செய்தாலே அக்கிராமத்தை பயிர்க் காப்பீட்டில் சேர்க்க விதி உள்ளது. ஆனால் சில நேரங்களில் விடுபடுவதுண்டு. உதாரணமாக, 2017இல் பிசான பருவத்தில் பாளையம் கால்வாய் பாசனத்தில் மருதூர் மணப்படை வீடு ஆகிய இரு போக நன்செய் பகுதி இத்திட்டத்தில் விடுபட்டது. இது தொடர்பாக முறையிட்ட பின்னர் பிரீமியம் செலுத்துவதற்கு முந்தைய தினத்தில் அரசாணை வழங்கப்பட்டது. 
கார் பருவத்தில் நெல் நடவும், பிசான பருவத்தில் நெல் நடவும் கடைமடையில் விதைப்பு அல்லது நடவு தொடங்கும் முன்பே பிரீமியம் செலுத்துவதற்கான அவகாசம் முடிந்துவிடும்.
வங்கி, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் பெறும் விவசாயிகளின் பிரீமியம், ஈட்டுறுதி வழங்கும் நிறுவனத்துக்கு பிரீமியம் கட்டும் கடைசி நாளிலிருந்து 15 நாள்களுக்குள் கிடைக்க வேண்டும். இல்லையெனில், காப்பீடு பெற முடியாது.
விவசாயிகள் கடன்பெற்ற நிறுவனத்திடம் தங்களது விண்ணப்பம் கிடைக்கப்பெற்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இழப்பீடு கணக்கிடப்படுவது எப்படி? 
அறிவிக்கப்பட்ட கிராமத்தில் 4 வயல்கள் அறிவியல் ரீதியாக தேர்வு செய்யப்படும். அந்த வயல்களில் ஒரு குறிப்பிட்ட அளவு இடத்தில் பயிரை அறுவடை செய்து, சுத்தப்படுத்தி, உலர்த்தி, பின்னர் எடை போட்டு விளைச்சல் கணக்கிடப்படும்.
விளைச்சல் கணக்கீட்டு முறையில் அதிகாரிகள் தங்களது விருப்பத்துக்கு ஏற்பவோ, மற்றவர் விருப்பத்துக்கு ஏற்பவோ செயல்பட முடியாது. பொருளியல், புள்ளியியல் துறை அலுவலர்கள், வேளாண் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் அறுவடை மேற்கொள்ளப்படும்.
கிராமத்தில் வயல் தேர்வு முதல் அறுவடை வரை உதவி வேளாண் அலுவலர்கள்தான் பொறுப்புடையவர். இவ்வாறு 4 வயல்களும் அறுவடை செய்து அதன் விளைச்சலை சராசரியைக் கணக்கிட்டு, அந்த சராசரி விளைச்சல் கடந்த 10 ஆண்டு சராசரி மகசூலைக் காட்டிலும் குறைவானால் இழப்பீடு கிடைக்கும். 
மேற்கண்ட 4 வயல்களில் நல்ல விளைச்சல் கிடைத்து, இதர வயல்களில் விளைச்சல் குறைவு ஏற்பட்டாலும் இழப்பீடு பெற முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போலத்தான் இதுவும்.
விளைச்சல் கணக்கீட்டை பொருளியல், புள்ளியியல்துறை ஈட்டுறுதி நிறுவனத்துக்கு அறுவடை முடிந்த 15 நாள்களில் அனுப்ப வேண்டும். ஈட்டுறுதி நிறுவனம் 7 நாள்களில் பரிசீலித்து இழப்பீடு அறிவிக்க வேண்டும். அறுவடைக்கு பின் உலரவைக்கும்போது இழப்பு ஏற்பட்டால் 48 மணி நேரத்துக்குள் உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தால் இழப்பீடு கிடைக்கும். இப்போதைய நிலையில், 2016-17ஆம் ஆண்டுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. 2017-18ஆம் ஆண்டு முடிந்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. இழப்புக்கும் இழப்பீடு பெறுவதற்குமான கால இடைவெளியை அரசு குறைக்கலாம்.
பயிர்க் காப்பீடு திட்டத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் திட்டத்தில் விவசாயிகள் அவசியம் சேர வேண்டும். காரணம், பயிர்க் காப்பீடு செய்வதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. 
பிரீமியம் செலுத்தினால் இழப்பீடு கட்டாயம் பெற வேண்டும் எனக் கருதுவது இயற்கைச் சீற்றத்தை வரவேற்பது போன்றது. பிரீமியம் செலுத்த வேண்டும். இழப்பு ஏற்பட்டால் வீட்டுக்கு, இல்லையெனில் நாட்டுக்கு என்ற எண்ணம் விவசாயிகளிடம் மேலோங்க வேண்டும். இவ்வாறு கருதினால்தான் விவசாயிகளின் துயரம் தீரும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com