விவசாயம்

தேனி மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கர் சாகுபடி: தென்மேற்கு பருவமழையால் மானாவாரி விவசாயத்தில் மறுமலர்ச்சி

கோ.ராஜன்

தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்மேற்கு பருவமழையால் 1.25 லட்சம் ஏக்கரில் மீண்டும் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மானாவாரி விவசாயத்தில் மறு மலர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்று பாசனம் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடியும், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் மானாவாரியாக 60 ஆயிரம் ஏக்கரில் சிறுதானியம், 40 ஆயிரம் ஏக்கரில் பயிறு வகை பயிர்கள், 20 ஆயிரம் ஏக்கரில் எண்ணெய் வித்துப் பயிர்கள், 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடியும் நடைபெறும்.
கடந்த, 2012-ம் ஆண்டு முதல் பருவநிலை மாற்றத்தால் போதிய மழையின்றி கூடலூர், கம்பம், தேவாரம், போடி, பெரியகுளம், க.மயிலை, வருஷநாடு ஆகிய பகுதிகளில் மானாவாரி சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வந்தது. வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் பாசன கிணறுகளில் நீர் சுரப்பின்றி மானாவாரி பயிர் மட்டுமின்றி, தோட்டப் பயிர் சாகுபடியும் நலிவடைந்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், கடந்த 3 ஆண்டுகளாக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு போக நெல் சாகுபடி மட்டும் நடைபெற்றது. சின்னமனூர், கூழையனூர், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையால் நெல் வயல்களில் மாற்றுப் பயிராக பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. மேற்குத் தொடர்ச்சி மலையடிவார மானாவாரி நிலங்கள் தரிசாக விடப்பட்டிருந்தன. 
மானாவாரி நிலங்களில் சாகுபடி: இந்நிலையில், கேரளத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து, அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் முதல் போக சாகுபடிக்கு நெல் நாற்று நடவுப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மாவட்டத்தில் கோடை மழையும், அதையடுத்து தென் மேற்குப் பருவ மழையும் பெய்து வருவதால் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார மானாவாரி நிலங்களில் விவசாயிகள் சாகுபடியை தொடங்கியுள்ளனர். 
1.25 லட்சம் ஏக்கரில்: சோளம், கம்பு, துவரை, அவரை, மொச்சை, உளுந்து, பாசிப் பருப்பு, தட்டைப் பயறு, பருத்தி, காட்டுத் தக்காளி உள்பட 1.25 லட்சம் ஏக்கரில் சிறுதானியம், பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கம்பம், கூடலூர் பகுதிகளில் எள் அறுவடை நடைபெற்று வருகிறது. மானாவாரி நிலங்களில் விதைப்பு தொடங்கியது முதல் தற்போது வரை போதிய மழை பெய்து வருவதால், நல்ல மகசூலை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தென்மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின், மானாவாரி விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
'
கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?

பருவ மழையால் மானவாரி விவசாயம் செழித்து, நல்ல மகசூல் கிடைத்தாலும், இடைத் தரகர்களால் விவசாயிகளுக்கு விளை பொருள்களின் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விற்பனை விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இடைத்தரகர்களிடம் முன் பணம் பெற்றுள்ள விவசாயிகள், சந்தை நிலவரம் தெரியாமலேயே விளை பொருள்களை விற்பனை செய்கின்றனர். 
சிறுதானியம், பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களின் சந்தை விலை நிலவரத்தை அன்றாடம் விவசாயிகளுக்கு தெரிவிக்கவும், விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் நிலையங்களை திறக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT