விவசாயம்

மல்லிகை சாகுபடியில் அதிக மகசூல் பெற...

தினமணி

தருமபுரி: விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக வருவாய் தரும் பூக்களில் மல்லிகைக்கு முக்கியமான இடமுண்டு. தென்னிந்தியாவில், சுமார் 20 வகையான மல்லிகை பயிரிடப்படுகிறது. சுமார் 20 முதல் 50 சென்ட் நிலத்தில் மல்லிகை பூக்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். மல்லிகையில் மொட்டுப் புழு, பூ ஈ, இலைப் பிணைக்கு புழு, செம்பேன் மற்றும் சாறு உண்ணும் பூச்சிகள் ஆகியவை அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றை கட்டுப்படுத்தி, அதிக மகசூல் பெறுவதற்கு, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர்கள் பா.ச.சண்முகம், க.இந்துமதி ஆகியோர் கூறும் வழிமுறைகள்:
மல்லிகையில் மொட்டுப் புழு மற்றும பூ ஈ ஆகியவை அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை இரண்டும் பூக்களைத் தாக்குவதால், விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பூக்களுக்கு சந்தையில் போதிய விலை கிடைப்பதில்லை. தருமபுரி மாவட்டத்தில், மல்லிகையில் பூ ஈக்களின் பாதிப்பு அதிகம் தென்படுகிறது. பூக்களின் நிறமானது இப் பூச்சிகளின் பாதிப்பால் மாறும்போது, விவசாயிகள் பல்வேறு வகையான பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால், சாகுபடி செலவு அதிகரிக்கிறதே தவிர, பாதிப்பு குறைவதில்லை. எனவே, விவசாயிகள் பூ ஈக்களின் பாதிப்பு குறித்தும், அதனைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை குறித்தும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
பாதிப்பு அறிகுறிகள் மற்றும் வாழ்க்கை சுழற்சி: பூ மொட்டுகள் சிறிதாக இருக்கும்போது, பூ ஈக்கள் மொட்டுகளின் நுனிப் பகுதியில் முட்டைகள் இடுகின்றன. முட்டையிலிருந்து வரும் புழுக்கள் பூவின் அடிப்பகுதியில் சென்று சாறை உறிஞ்சுகின்றன. இதனால், பூவின் அடிப்பகுதி பெருத்து விடுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பூ மொட்டுகள் நீல நிறமாகி விடுகிறது. பாதிப்பு அதிகமாகும்போது, பூ மொட்டுகள் உதிர்வதோடு மட்டுமல்லாமல், செடியின் வளர்ச்சி குன்றி, இறுதியாகக் காய்ந்து பூ மொட்டுகளின் அடிப்பகுதியில் மஞ்சள் நிறப் புழுக்களைக் காணலாம். இந்தப் புழுக்கள் சாறை உறிஞ்சும்போது வெளியிடும் நச்சுத் திரவத்தால், பூக்களின் நிறம் நீலமாக மாறுகிறது. ஒரு பூ மொட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட புழுக்கள் பாதிப்பை உண்டாக்கும்.
பூ ஈக்கள் சுமார் 100 மிகச் சிறிய முட்டைகளை பூ மொட்டுகளில் இடுகின்றன. சுமார் 24 மணி நேரத்தில் இந்த மொட்டுகளில் இருந்து வெளியேறும் புழுக்கள், பூ மொட்டினுள் சென்று பாதிப்பை உண்டாக்குகின்றன. இவை பூ மொட்டின் பகுதிகளைச் சேதப்படுத்தும்போது, நச்சுத் திரவத்தை வெளியிடுவதால், பூ மொட்டின் அடிப்பகுதி பெருத்துக் காணப்படும். சுமார் 5 முதல் 7 நாள்கள் வரை புழு பருவத்தில் இருக்கும் பூ ஈக்கள், பின்பு வெளியேறி மண்ணில் கூட்டுப் புழுவாக மாறி விடுகிறது. கூட்டுப் புழுக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்களின் வாழ்நாள் 12 - 21 நாள்கள். தட்பவெப்ப நிலையைப் பொருத்து, கூட்டுப் புழுவின் வாழ்நாள் மாறுபடும். கூட்டுப் புழுவிலிருந்து வெளிவரும் தாய் ஈக்கள் 4 நாள்கள் வரை இருக்கும். பூ ஈக்கள் 21 முதல் 28 நாள்களுக்குள் வாழ்க்கை சுழற்சியை முடித்துவிடும்.
மேலாண்மை: நிறம் மாறிய பூ மொட்டுகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். வயலில் வடிகால் வசதிகள் சரியாக இருக்க வேண்டும். பூ ஈக்களுக்கு மாற்றுப் பயிர்களான தக்காளி, கத்தரி, பாகல் போன்றவற்றை மல்லிகை வயலுக்கு அருகாமையில் பயிரிடுவதைக் கைவிட வேண்டும்.
மல்லிகைச் செடியின் அருகிலுள்ள பகுதியை கிளறி விடுதல் அல்லது உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களை அழிக்க முடியும். சரியான பருவத்தில் கவாத்து செய்தல் வேண்டும். மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி அல்லது விளக்குப் பொறி வைப்பதன் மூலம் தாய் ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். பாதிப்பு அதிகமாகும்போது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதம் அல்லது வேப்பம் எண்ணெய் 3 சதம் அல்லது தயோமீத்தாக்சம் 0.5 கி.லி. அல்லது இமிடாகுளோபிரிட் 1.0 மி.லி. என இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். மல்லிகைக்கு உரம் வைக்கும்போது வேப்பம் பிண்ணாக்கு அல்லது புங்கம் பிண்ணாக்கு கலந்து வைக்கலாம். எனவே, மல்லிகை மலர் சாகுபடியில் இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றி, பூ ஈக்களின் பாதிப்புகளைத் தவிர்த்து, நல்ல மகசூல் பெற்று பயனடையலாம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT