வெள்ளாடு வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி?

வெள்ளாட்டுக் குட்டிகளை முறையாகப் பராமரிப்பு செய்து வந்தால், உடல் வளர்ச்சியும், எடையும் உடைய குட்டிகளைப் பெறுவதுடன், அவற்றை இறப்பின்றி காத்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்
வெள்ளாடு வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி?

நாமக்கல்: வெள்ளாட்டுக் குட்டிகளை முறையாகப் பராமரிப்பு செய்து வந்தால், உடல் வளர்ச்சியும், எடையும் உடைய குட்டிகளைப் பெறுவதுடன், அவற்றை இறப்பின்றி காத்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வழங்கும் ஆலோசனைகள்:
வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பதைக் காட்டிலும் அதிக லாபம் தரும் தொழில். ஆடு வளர்ப்பின் மூலம் நமக்கு இறைச்சி, பால் மற்றும் எரு முதலியவை கிடைக்கின்றன.
வெள்ளாடுகள் அனைத்து தட்பவெப்ப நிலையிலும், அனைத்து நிலங்களிலும் வளர்ந்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் தன்மை உடையவை. வெள்ளாட்டு இறைச்சியை மக்கள் அதிகம் விரும்பி உண்பதால், இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதன் வளர்ப்பில், குட்டிகளை இறப்பில் இருந்து காப்பாற்றுவதன் மூலம், அதிக எண்ணிக்கையில் ஆடுகளை உற்பத்தி செய்து லாபம் பெற முடியும்.
கொட்டகை பராமரிப்பு: குட்டி ஈனுவதற்கு 15 நாள்கள் முன்னதாக குட்டிகள் அடைத்து வைக்கும் கொட்டகையைத் தயார் செய்ய வேண்டும். கொட்டகையின் தரைப்பகுதியை 10 செ.மீ சுரண்டி எடுத்துவிட்டு புதியதாக கிணற்று சரளை மணல் மற்றும் செம்மண்ணை நிரப்ப வேண்டும்.
அதனுடன், சுண்ணாம்புத் தூள் கொண்டு கலந்து மண் தரையை உருவாக்க வேண்டும். குட்டி கொட்டகையின் சுவர் மற்றும் கம்பி வலைகளை தீப் பிழம்பு சுத்தம் செய்ய வேண்டும். இதனால் கொட்டகையில் உள்ள உண்ணி மற்றும் பூச்சிகள் அழிக்கப்படுகின்றன.
சினையாடுகள் குட்டி ஈனும்போது: குட்டி ஈனும் தருவாயில் உள்ள ஆடுகள், தீவனம் உண்ணாமை, அங்கும் இங்கும் நடந்து கொண்டிருத்தல், அடிக்கடி படுத்து எழுந்திருத்தல், மற்றும் சிறிது சிறிதாக சிறுநீர் கழிதல், பின் குட்டி ஈனுவதற்கு அறிகுறியாக தண்ணீர் குடம் உடைந்து முன்கால்கள் மற்றும் இவற்றுக்கு இடையே தலை வெளியே வரும்.
ஒருசில சமயங்களில், பின்னங்கால் முதலிலும், மற்றவை பின்பும் வரும். மற்றபடி, குட்டி பிறக்க சிரமப்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி, குட்டியும் தாயும் நன்கு இருக்க வழிவகை செய்ய வேண்டும்.
குட்டிகள் பராமரிப்பு முறைகள்: குட்டிகள் ஈன்றவுடன், குட்டியின் வாய் மற்றும் மூக்குத் துவாரம் போன்ற பகுதிகளில், ஒட்டி உள்ள கோழையை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், குட்டிகள் சீராக மூச்சுவிட ஏதுவாக இருப்பதுடன், மூச்சுத் திணறலால் ஏற்படும் இறப்பையும் தவிர்க்கலாம்.
தொப்புள் கொடியை, 3 செ.மீ. அளவுக்கு விட்டு வெட்டி, டிங்சர் அயோடின் அல்லது டெட்டால் பேன்ற கிருமி நாசினியைத் தடவ வேண்டும். அதன் மூலம், தொப்புள் கொடியின் மூலம் பரவும் நோய்கள் தவிர்க்கப்படும்.
குட்டிகள் பிறந்த அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்துக்குள் சீம்பால் குடிக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்க்கும் திறன் வாய்ந்த குளோபுலின் புரதம், வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ அதிகம் இருப்பதால், குட்டிகளை நோயில் இருந்து பாதுகாக்கிறது. குட்டிகளின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டு, நோயினால் இறப்பது தவிர்க்கப்படுகிறது.
ஐப்பசி, கார்த்திகை போன்ற மழைக் காலங்களிலும், தை, மாசி போன்ற குளிர் மற்றும் பனிக் காலங்களிலும் பிறக்கும் குட்டிகள் இறக்க வாய்ப்பு உள்ளது. அவற்றை தவிர்க்க, கொட்டகையில் தடுப்புகள் அமைத்து, காய்ந்த புல், வைக்கோல், உலர்ந்த பொட்டுகளைப் பரப்பி வெதுவெதுப்பாக இருக்க செய்வது அவசியம்.
சித்திரை, வைகாசி போன்ற காலங்களில் பிறக்கும் குட்டிகளுக்கு, வெப்பத்தைக் குறைக்க ஈரமான கோணிப் பை, மின் வசிறிகள் மற்றும் கூரை மீது நீர் தெளித்தல் போன்ற முறைகளைக் கையாளலாம்.
குட்டிகளுக்கு, குடற்புழு நீக்கம் முதல் ஆறு மாதங்களுக்கு, மாதம் ஒரு முறை, கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்ய வேண்டும். நோய் தடுப்பூசிகள், துள்ளுமாரி நோய்க்கு, 6வது வாரம், கோமாரி நோய்க்கு, 2வது மாதம், அம்மை மற்றும் வெக்கை சார்பு நோய்க்கு 3ஆவது மாதம் தடுப்பூசி போடுதல் அவசியம்.
மூன்று மாதம் முடிந்தவுடன், குட்டிகளை ஆட்டில் இருந்து பால் மறக்கச் செய்து பிரித்து, தனியே வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது ஆடுகள் அடுத்து ஈற்றிற்கு விரைவாக சினைக்கு வர ஏதுவாக இருக்கும்.
குட்டிகளுக்கான தீவனம்: இளம் குட்டிகள் முதல் மூன்று மாதங்கள் வரை தாயிடம் பால் குடிக்கும். நான்காவது மாதம் முதல், அடர் தீவனம் உட்கொள்ள ஆரம்பிக்கும். அதற்கென குட்டிகளுக்கான தீவனத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம். தகுந்த பரமாரிப்பு முறைகளைக் கையாண்டு, தீவனங்களை சரியான முறையில் கொடுத்து வந்தால், நல்ல உடல் வளர்ச்சியும், எடையும் உடைய குட்டிகளைப் பெற முடியும்.
தாது உப்புக்கட்டி: இந்த கட்டியை ஆட்டுக் கொட்டகையில் கட்டி தொங்கவிடுவதன் மூலம், ஆட்டுக்குட்டிகள் மற்றும் சினை ஆடுகள், தங்களுக்குத் தேவையான தாதுக்களை எளிதாகப் பெற ஏதுவாக இருக்கும்.
இவற்றில் முக்கிய தாது உப்புகளான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், கந்தகம் மற்றும் மெக்னீசியமும் சிறிதளவு தேவைப்படும் தாதுக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்றவையும் அடங்கியுள்ளன.
குட்டிகள் இறப்புக்கான காரணமும் தடுப்பு முறையும்: இளம் குட்டிகளை, இரண்டு வேளை தாயிடம் இருந்து பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். இளம் குட்டி இரண்டு வேளை குடிக்காமல் இருந்தால், அவை சோர்ந்து இறக்க நேரிடும்.
குட்டி பிறந்தவுடன் சீம்பால் கொடுக்க வேண்டும். சீம்பால் குடிக்காத குட்டி அல்லது காலம் கடந்து கொடுப்பது போன்றவற்றால், குட்டி சோர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இறக்க நேரிடும்.
திடீர் தட்பவெப்ப நிலை மாறுபடுவதால், இறக்க நேரிடுகிறது. சுவாசம் சம்பந்தமான நோய்களினால் இறக்கலாம். நோய் கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் வயிற்றுப்போக்கு இவற்றை கட்டுப்படுத்த கலப்புத் தீவனத்துடன் குளோர் சைக்கிளின் என்ற எதிர் உயிரி மருந்தைக் கலந்து அளிப்பதன் மூலம் கிருமிகளால் ஏற்படும் கழிச்சலைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு பராமரிப்பு செய்தால், குட்டிகளை இறப்பின்றி காத்து ஆரோக்கியமான வெள்ளாடுகளை பெற்று, அதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com