மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்

மக்காச்சோளத்தில் அண்மைக்காலமாக ஆப்ரிகன் படைப்புழு என்கிற புழு தாக்குதலால் பெரும் பாதிப்பு
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்

தருமபுரி: மக்காச்சோளத்தில் அண்மைக்காலமாக ஆப்ரிகன் படைப்புழு என்கிற புழு தாக்குதலால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் படைப்புழுத் தாக்குதல் அறிகுறிகளும், அதனைக் கட்டுப்படுத்த விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வேளாண் உதவி இயக்குநர்(பொறுப்பு) சு.அருணன் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரவி ஆகியோர் கூறியது: 
தருமபுரி மாவட்டத்தில், பரவலாக மக்காச் சோளம் பயிரிடப்படுகிறது. இதில், பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது. மக்காச் சோளத்தில் படைப்புழுத் தாக்குதலினால், விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. 
தாக்கும் பயிர்கள்
இப் படைப்புழுவானது மக்காச் சோளம், இனிப்பு மக்காச் சோளம், சோளம் மற்றும் புல்வகை களைகளில் தாக்குதல் அதிகம் காணப்படும். இவற்றை தவிர, நெல், கரும்பு, பருத்தி, சிறு தானியங்கள், நிலக்கடலை, புகையிலை மற்றும் கோதுமையிலும் இதன் தாக்குதல் பரவலாகக் காணப்படும். காய்கறிப் பயிர்களை அதிகம் விரும்பாவிட்டாலும், அதிலும் இப் புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தும். பூ வகைப் பயிர்களையும், பப்பாளி, திராட்சை போன்ற பழப் பயிர்களையும் தாக்கவல்லது. 
அறிகுறிகள்
படைப் புழுவானது ஆறு புழு நிலைகளைக் கொண்டது. இளம் புழுப் பருவம் கருப்புத் தலையுடன் பச்சை நிறத்தில் காணப்படும். ஆறாம் நிலையிலுள்ள புழுவின் தலைப் பகுதியில் வெண்ணிறக் கோடுகளும், புழுவின் இறுதிப் பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிறப் புள்ளிகளும் தென்படும். 
இந்த அறிகுறிகளைக் கொண்டு விவசாயிகள், இப் புழுவை எளிதில் கண்டறியலாம். புழுக்கள் வெயில் அதிகமாக இருக்கும் போது இலையின் அடிப் பகுதியில் சென்று மறைந்து கொண்டு பாதிப்பை உண்டாக்கும். தாய் அந்துப்பூச்சி 100 முதல் 200 வரை முட்டைகளை குவியல்களாக பெரும்பாலும் இலையின் அடிப் பகுதியில் இடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டி சேதாரத்தை உண்டாக்கும். இளம் புழுக்கள் நூலிழைகளை உருவாக்கி அதன் மூலம் காற்றின் திசையில் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்குச் செல்லும். இளம் செடிகளில் இளம் உறைகளையும், முதிர்ந்த செடியில் கதிரின் நூலிழைகளையும் அதிகம் சேதப்படுத்தும். இரவு நேரங்களில் அதிகமாக சேதத்தை விளைவிக்கும். 
கட்டுப்படுத்தும் முறைகள்
உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். விதை நேர்த்தியின் மூலம் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க இயலும். காலம் தாழ்த்தி பயிர் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வயலைச் சுற்றியும் பயறு வகை மரப் பயிர்கள் அல்லது ஆண்டு முழுவதும் பூக்கும் தாவரங்களைத் தடுப்புப் பயிராக விதைக்கலாம். இவை படைப் புழுவின் எதிரிகளை ஊக்குவிக்கும். 
நேப்பியர் புல்லை வயலைச் சுற்றிலும் வரப்புப் பயிராகப் பயிரிடலாம். மக்காச் சோளத்தில் வேலி மசாலை ஊடுபயிராகப் பயிரிடலாம். இதிலிருந்து வெளிவரும் திரவம் படைப் புழுவுக்கு உகந்ததல்ல. மக்காச்சோளத்துடன் மரவள்ளி அல்லது பீன்ஸ் போன்ற படைப் புழுவால் அதிகம் விரும்பப்படாத பயிர்களை ஊடுபயிராகப் பயிர் செய்யலாம். குறுகிய கால மக்காச்சோள ரகங்களைப் பயிரிடுவதன் மூலம் படைப் புழுவின் பாதிப்பைக் குறைக்கலாம். முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா, டிலினோமஸ் மற்றும் புழு ஒட்டுண்ணிகளான செலோனிஸ், கொடிசியா போன்றவையும் இப் புழுவின் பாதிப்பைக் குறைக்கவல்லவை. புள்ளி வண்டுகள், தரை வண்டுகள் மற்றும் பூ பூச்சிகள் போன்றவை படைப் புழுவை உண்ணும். வயலில் பூக்கும் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
நுண்ணுயிர் பூச்சிகொல்லிகளான பவுரியா பேசியான, மெட்டாரைசியம் அனைசோபிலியே மற்றும் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம் படைப் புழுவின் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். 
படைப்புழுவின் பாதிப்பு அதிகமாகும் போது, பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 2 மில்லி / ஒரு லிட்டர்(தண்ணீர்), ஸ்பைனோசேட் 0.5 மில்லி / ஒரு லிட்டர், இன்டாக்úஸாகார்ப் 1 மில்லி / ஒரு லிட்டர், ஏமமெக்டின் பென்சோயேட் 0.4 கிராம் / ஒரு லிட்டர் ஆகிய பூச்சிகொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். 
எனவே, விவசாயிகள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி படைப் புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தி, நல்ல மகசூல் பெற்று பயனடையலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com