விவசாயம்

கறவை மாடுகளைத் தாக்கும் மடி நோயை தடுப்பது எப்படி?

தினமணி

கிருஷ்ணகிரி: கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது மடி நோய். கறவை மாட்டின் பால் மடியில் உள்ள பால் சுரக்கும் சுரப்பிகளில் சுழற்சி ஏற்படுவதுதான் மடி வீக்க நோய் அல்லது மடி நோய் என அழைக்கப்படுகிறது. நமது நாட்டு மாடுகளை அதிகம் மடி நோய் தாக்குவது இல்லை. அதிக பால் தரக் டிய வெளிநாட்டு கலப்பின மாடுகளான ஜெர்ஸி போன்ற கறவை மாடுகளைத் தான்இந்நோய் அதிகம் தாக்குகிறது. இதனால், பால் உற்பத்தி குறைவதுடன், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. 
நோய் காரணம்: பல்வேறு நுண்ணுயிர்கள், நச்சுயிரிகள் மாட்டின் மடியில் உள்ள பால் சுரப்பிகளைத் தாக்கி மடி வீக்க நோயை ஏற்படுத்துகின்றன. இத்தகைய கிருமிகள் பொதுவாக காம்பின் நுனியில் உள்ள துவாரத்தின் வழியாக மடிக்குள் சென்று பால் மடி திசுக்களில் பெருகி மடி நோயை உண்டாக்கும்.
அசுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படும் மாடுகளையே இந்த நோய் தாக்குகிறது. அசுத்தமான உபகரணங்கள், பால் கறவையாளரின் அசுத்தமான கைகள், உடைகள் மற்றும் அசுத்தமான சுற்றுச்சூழல் போன்றவற்றின் மூலம் இந்த நோய் ஒரு மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்குப் பரவுகிறது. 
நோய் அறிகுறிகள்: இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளான மாட்டின் மடியானது வீக்கத்துடன் காணப்படும். பாதிக்கப்பட்ட மாட்டின் மடியானது வெதுவெதுப்பாகவும், வலியுடனும் இருக்கும். வலியின் காரணமாக மடியைத் தொட்டால் மாடு உதைக்கும். நோய் தீவிரமாக இருந்தால் காய்ச்சல் அதிகமாக இருக்கும். தீவனத்தை உள்கொள்ளாது. நோயுள்ள மடியிலிருந்து கறக்கப்படும் பாலானது நீர்த்து திரவமாகவும், திரித் திரியாகவும் காணப்படும். சில நேரங்களில் இரத்தம் கலந்தும் காணப்படும். கறக்கப்படும் பாலின் அளவு குறைந்து விடும். 
முதலுதவி: 200 கிராம் சோற்றுக்கற்றாழை, 50 கிராம் மஞ்சள், 5 கிராம் சுண்ணாம்பு ஆகியவற்றை ஆட்டுக் கல்லில் நன்றாக கெட்டியாக அரைத்து ஒரு கையளவு எடுத்து, சிறிது நீர் கலந்து பாதிக்கப்பட்ட மாட்டின் பால் மடிப் பகுதி முழுவதும் நன்றாக பூச வேண்டும். ஒரு நாளைக்கு 10 முறை என நோய் தாக்குதல் குறையும் வரையில் பூச வேண்டும். இதற்குள் அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். 
சிகிச்சை: நோய் தாக்குதலுக்கு உள்ளான கறவை மாடு, அசதியாக இருக்கும் நிலையில், உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி நோய் தாக்குதலுக்கு காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப மருந்தைப் பயன்படுத்த வேண்டும். நோயின் தன்மைக்கு ஏற்ப தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை தாமதமாகும் பட்சத்தில், மாடு உயிரிழக்க வாய்ப்பு உள்ளதோடு, பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும். 
நோய் தடுப்பு முறைகள்: மாட்டுக் கொட்டகையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். சாணம் மற்றும் சிறுநீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். பால் கறக்க பயன்படுத்தப்படும் பாத்திரம் அல்லது இயந்திரத்தை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பால் கறக்கும் முன்பும் பின்பும் மடியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் என்ற கிருமி நாசினியைக் கொண்டு தூய்மைப்படுத்திய பின், உலர்ந்த துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். 
பால் கறப்பவரின் கை நகங்களை வெட்டி, சுத்தமாக வைத்துக் கொண்டு கறவை பணியில் ஈடுபட வேண்டும். கறவை மாட்டுக்கு காயம் ஏற்படாமல் இருக்கும் வகையில் பாலைக் கறக்க வேண்டும். பால் கறந்தவுடன், மாட்டைப் படுக்க அனுமதிக்கக் கூடாது. பால் கறந்தவுடன் அதன் காம்பு விரிந்திருக்கும். இத்தகைய நிலையில், மாட்டைப் படுக்க அனுமதித்தால் நோய் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. மடியில் பால் தேங்க விடாமல் முற்றிலும் கறந்து விட வேண்டும். விட்டமின் ஈ, தாமிரம் போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக இருக்கும் தீவனத்தை அளிக்க வேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை கறவை செய்த பாலை பரிசோதனை செய்து நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவது நல்லது. ஆரம்ப நிலையிலேயே நோய் தாக்குதலை கண்டறிவதன் மூலம் சிகிச்சை அளிப்பது எளிது. 
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் மடி நோயைத் தடுக்க மாஸ்டிகார்டு என்ற புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டீப் புரொடெக்ட் என்பது எந்த ரசாயனமும் இல்லாத இயற்கை மூலப் பொருள்களால் உருவாக்கப்பட்டது. இத்துடன் தாணுபாஸ் சோமாடிக்செல் கணக்கீட்டு கலனைப் பயன்படுத்துவதன் மூலம் மடி வீக்க நோயிலிருந்து மாட்டினங்களைப் பாதுகாக்கலாம். 
மடி வீக்க நோய்க்கான அறிகுறிகள் தெரியவந்தால், தானாக சிகிச்சை செய்வதற்கு முற்படாமல், கால்நடை மருத்துவர்களை அணுகி முறையான சிகிச்சைக்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும். இதனால், மடி நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரி கிராமத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தைத் தொடர்பு கொள்ளளாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT