படைப்புழுக்களில் இருந்து மக்காச்சோளப் பயிரை காக்க...

மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மதுரை வேளாண்  அறிவியல் மையம்
படைப்புழுக்களில் இருந்து மக்காச்சோளப் பயிரை காக்க...


மேலூர்: மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மதுரை வேளாண்  அறிவியல் மையம் தெரிவித்துள்ள தகவல்கள்:
பொதுவாக சராசரி தட்பவெட்பநிலை 29 சென்டிகிரேடு நிலவும்போது படைப்புழுவின் வளர்ச்சி அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இப்புழுவானது மக்காச்சோளம், பருத்தி, பழ வகைகள், நிலக்கடலை, பயறு வகை, புல்வகை உள்பட சுமார் 80 வகை பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. படைப்புழுவின் வளர்ச்சி 30 நாள்களாகும். குளிர்காலத்தில் 50 முதல் 90 நாள்களாகும். 
தாய் அந்திப் பூச்சியானது, அதிகதூரம் பறக்கும் தன்மையுடையது. பெண் தாய் அந்துப்பூச்சி 1,500 முதல் 2,000 முட்டைகளை இடும் வல்லமையுள்ளது. ஒரு முட்டை குவியலில் 150 முதல் 200 முட்டைகளை இட்டு வைத்திருக்கும். இளம்புழு கருப்பு தலையுடன் உடல் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வளர்ச்சி ஆறு நிலைகளைக் கொண்டது. வெயில் காலத்தில் புழுப்பருவ வளர்ச்சி 14 நாள்களாகவும், குளிர் காலத்தில் 30 நாள்களாகவும் இருக்கும். 
கூட்டுப்புழு, படைப்புழு முட்டைகள் மண்ணுக்குள் 2 முதல் 8 செ.மீ. ஆழத்தில் இருக்கும். மண்ணிலுள்ள இலைச் சருகுகளை குவியலாக்கி அதில் நூல்போன்ற திரவத்தைச் சுரந்து கூட்டுப் புழுவாக மாறும். தாய் அந்துப்பூச்சிகள் பயிரில் குருத்து வெளிவரும் இடத்திலும், இலைகளின் அடிப்பகுதிகளிலும் தங்கி இலைகளை சுரண்டித் தின்று வளரும். இலைகள் பச்சையத்தை இழந்து காய்ந்துவிடும். மக்காச்சோளத்தில் கதிர்வெளிவரும் குருத்தில் புழுக்கள் தங்கி, கதிரை குருத்துப் பருவத்திலேயே தின்று சேதப்படுத்தும். 
கோடை உழவு செய்வதன் மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். மண் வளம், ஈரப் பதத்தையும் சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். தழைச்சத்தை குறைந்த அளவே இடவேண்டும். ஆரம்பத்திலேயே விதை நேர்த்தியை முறையாகச் செய்ய வேண்டும். இது ஆரம்பத்திலேயே பாதிப்பை தவிர்க்க உதவும்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரே காலத்தில் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் ஒவ்வொரு தோட்டமும் வெவ்வேறு வளர்ச்சியிலிருந்து புழுக்கள் வளர்ச்சிக்கு உணவாகி விடும். வயலைச் சுற்றிலும் பயறுவகை பயிர்களை விதைப்பதால், படைப்புழுவின் இயற்கை எதிரிகள் வளர்ச்சிக்கு உதவும். வயலைச் சுற்றிலும் நேப்பியர் புல் பயிரிடுவதன் மூலம் புழுக்கள் வளர்ச்சியை தடுக்கலாம்.
வேலிமசாலாவை ஊடுபயிராக பயிரிட்டால் படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம். மக்காச்சோளத்துடன் ஊடுபயிராக மரவள்ளிக் கிழங்கு, பீன்ஸ் பயிரிடலாம். குறைந்த காலத்தில் மகசூல் தரும் மக்காச்சோள ரகத்தை சாகுபடி செய்தால் படைப்புழுவின் பாதிப்பைத் தவிர்க்கலாம். நிலத்தில் களைச் செடிகளை முழுமையாக அகற்றப்படவேண்டும். டிரைக்கோகிரம்மா, டிலிமோமஸ் மற்றும் புழு ஒட்டுண்ணிகளை வயலில் விடுவதன் மூலம் படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். மேலும் நுண்ணுயிர் பூச்சிக் கொல்லிகளை உபயோகித்தும் படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மதுரை வேளாண் கல்லூரி வளாகத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தை தொடர்புகொள்ளலாம். இந்தத் தகவலை வேளாண் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ், பா.உஷாராணி, ஆ.கலைச்செல்வன், சி.ஆனந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com