இஸ்ரேல் நாட்டு விவசாய முறையை பின்பற்ற வேண்டும்: ஆளுநர் வஜுபாய் வாலா

கர்நாடக விவசாயிகள் இஸ்ரேல் நாட்டு விவசாய முறையைப் பின்பற்றி பயனடைய வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா கேட்டுக் கொண்டார்.

கர்நாடக விவசாயிகள் இஸ்ரேல் நாட்டு விவசாய முறையைப் பின்பற்றி பயனடைய வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா கேட்டுக் கொண்டார்.
பெங்களூரு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை வேளாண் கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: தேசிய அளவில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல விவசாயிகள் மழையை நம்பி பயிரிட்டுள்ளனர். மழை பொய்துவிட்டால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 
மழை வரும்போது அதனை சேமிக்காமல் விட்டு விடுகிறோம். மழை சேமிப்பை ஊக்குவிப்பதோடு, விவசாயிகள் தங்களிடம் உள்ள தண்ணீர் இருப்பை கணக்கிட்டு பயிரிட வேண்டும். இஸ்ரேல்நாட்டில் தங்களிடம் உள்ள தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு பயிரிடுகின்றனர். பெரும்பாலான அவர்களின் பயிர்கள் குறைந்த தண்ணீர் விளைவிக்கப்படுகின்றன. எனவே, அந்த முறையை மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பின்பற்ற வேண்டும். 
கர்நாடகத்தில் வேளாண் பல்கலைக்கழகம் விவசாயத்தில் பல்வேறு சோதனைகளை செய்து வெற்றிக் கண்டுள்ளது. அதனை விவசாயிகளும் பயன்படுத்தி, பலனடைய வேண்டும். பெரும்பாலான கிராமங்களில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை நம்பியுள்ளனர். எனவே, விவசாயத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். விவசாயத்தில் பழைய முறைகளை நம்பி இருப்பதைவிட, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் நவீன விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். வேளாண் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் சந்தையை ஏற்படுத்தித் தர வேண்டும்
என்றார்.
நிகழ்ச்சியில் வட கர்நாடகம் யல்லாபுரா கண்ணூர் ஹெக்ரானே கிராமத்தைச் சேர்ந்த பிரசாத்ராமுக்கு தோட்டக்கலையில் சிறந்து விளங்கியதற்காக, எம்.எச்.மரி கெளடா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. கோலார் மாவட்டம், மதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த எம்.என்.ரவிசங்கருக்கு சிறந்த விவசாயி என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர்ரெட்டி, வேளாண்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com