பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தல்: கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

நவ.25-ஆம் தேதி நடக்கவிருந்த பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தலுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நவ.25-ஆம் தேதி நடக்கவிருந்த பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தலுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு மற்றும் செயற்குழுவுக்கான பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக ஈராண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் 2018-2020-ஆம் ஆண்டு பருவத்திற்கான தேர்தல் நவ.25-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனுதாக்கல் நவ.5-ஆம் தேதி தொடங்கி, நவ.13-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 
இத்தேர்தலில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய தலைவர் தி.கோ.தாமோதரன் மற்றும் துணைத் தலைவர் கோ.தாமோதரன் இருவரும் தனித்தனியே அணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். 
தி.கோ.தாமோதரன் அணியில் தி.கோ.தாமோதரன்(தலைவர்), அமுதபாண்டியன்(துணைத்தலைவர்), வா.ஸ்ரீதரன்(செயலாளர்), மு.சம்பத்(பொருளாளர்), வா.கோபிநாத், நா.மகிழ்நன், இராம.இளங்கோவன்,இல.பழனி(துணைச்செயலாளர்கள்), மு.புண்ணியமூர்த்தி, சு.பாரி, கோபால்மணி, அ.து.மகேந்திரவர்மா, அ.இ.சரவணன், அ.ம.இரவிச்சந்திரன், முருகன்.ஜி, எம்.ரவி, சு.புவனேஸ்வரி(செயற்குழு உறுப்பினர்கள்) ஆகியோரும்; கோ.தாமோதரன் அணியில் கோ.தாமோதரன்(தலைவர்), ஐ.இராசன்(துணைத்தலைவர்), எஸ்.இராமசுப்பிரமணியன்(செயலாளர்), சு.கோவிந்தராசன்(பொருளாளர்), பி.எஸ்.சுரேஷ்குமார், மணிகண்டன், இராமச்சந்திரன், ஆர்.எம்.பழனிச்சாமி(துணைச்செயலாளர்கள்), இராமசுப்பு, வெள்ளத்துரை, ஆர்.சண்முகம், எஸ்.எஸ்.தங்கம், ஆறுமுகம், சரவணக்குமார், பி.எஸ்.மணி, குகனேசுவரன், விஜயலடுச்மி, என்.சுந்தரேசன், கே.மாறன்(செயற்குழு உறுப்பினர்கள்)ஆகியோரும் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை அளித்திருந்தனர்.
இந்நிலையில், தேர்தல் நடத்துவதற்கு அனுமதி அளித்து மாவட்ட துணைப் பதிவாளர் பிறப்பித்திருந்த உத்தரவை எதிர்த்து சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் என்.சிவா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை நவ.9-ஆம் தேதி விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வீரப்பா, மாவட்ட துணைப்பதிவாளர் உத்தரவின்படி நடக்கவிருந்த பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார். 
இதுதொடர்பாக மாநில அரசுக்கும், பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்பவும் ஆணை பிறப்பித்திருந்தார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 
கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளரின் உத்தரவுக்கிணங்க, நவ.25-ஆம் தேதி நடக்கவிருந்த பெங்களூரு தமிழ்ச் சங்கத்திற்கான தேர்தலை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வெளியாகும் வரை தடைவிதித்து மாவட்ட துணைப் பதிவாளர் நவ.14-ஆம் தேதி உத்தரவுபிறப்பித்துள்ளார்.
இது பெங்களூரு தமிழ்ச் சங்க உறுப்பினர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com