அசையா சொத்துப் பதிவுக்கு இணையதள சேவை: முதல்வர் தொடக்கிவைப்பு

அசையா சொத்துப் பதிவுக்காக காவிரி இணையதள சேவைகளை முதல்வர் குமாரசாமி தொடக்கிவைத்தார்.

அசையா சொத்துப் பதிவுக்காக காவிரி இணையதள சேவைகளை முதல்வர் குமாரசாமி தொடக்கிவைத்தார்.
கர்நாடக முத்திரைத்தாள் மற்றும் பதிவுத் துறையின் சார்பில் பெங்களூரு,விதான செளதாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களைப் பதிவுசெய்வதற்கான காவிரி இணையதள சேவைகளை முதல்வர் குமாரசாமி தொடக்கிவைத்தார். 
இந்தநிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, கர்நாடக முத்திரைத்தாள் மற்றும் பதிவுத்துறை ஆணையர் திரிலோக்சந்திரா, மஜத மாநிலத்தலைவர் எச்.விஸ்வநாத், எம்எல்ஏ ரோஷன்பெய்க், எம்எல்சிக்கள் எச்.எம்.ரேவண்ணா, ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் முதல்வர் குமாரசாமி பேசியது: நவீன உலகில் விரல் நுனியில் அனைத்தும் கிடைக்கும் காலத்தில், அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களின் கைகளில் கிடைக்க செய்யும் முயற்சியாக காவிரி இணையதள சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. மாநில அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை இணையதளத்தின் வழியாக மக்களுக்கு கொண்டுசேர்க்கும் பணி படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், அசையா சொத்துக்களின் விற்பனை, அடமானம், குத்தகை, அதிகாரம் வழங்கல் போன்ற பதிவுகளை இணையதளம் வழியாக பெறுவதற்காக காவிரி இணையதளசேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வசதியை பொதுமக்கள்பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கூட்டணி அரசு வந்தபிறகு மக்களுக்கு பயன் தரும், காலத்தை விரயமாக்க பல்வேறுவசதிகளை ஏற்படுத்தி திட்டம் வகுத்துச் செயல்பட்டுவருகிறோம். பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட சான்றிதழையும் காவிரி இணையதள சேவையில் பெறலாம். அதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. முத்திரைத்தாள் மற்றும் பதிவுத்துறை, வருவாய்த்துறைகளின் சேவைகளை மக்கள் பெறும்போது இடைத்தரகர்களை சந்திக்க நேர்கிறது. அதற்கு இடமளிக்கக்கூடாது என்பதற்காகவே இச்சேவை
தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே பேசியது: மக்களுக்கு ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தை தரவேண்டும் என்பதற்காக காவிரி இணையதள சேவைகளை தொடங்கியுள்ளோம். மேலும் ஊழலற்ற நிர்வாகத்தை அளிக்கவிருக்கிறோம். 
இதற்காக வருவாய்த் துறையில் சீர்த்திருத்தம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை அறிமுகம் செய்யவிருக்கிறோம். 
காவிரி இணையதள சேவையின் வாயிலாக அசையா சொத்துக்களின் சிட்டா, அடங்கல், விற்பனை பத்திரம், அடமானம், குத்தகை ஆவணங்களை பதிவுசெய்துகொள்ளலாம். 
சொத்துக்களை மதிப்பிடுதல், முத்திரைத்தாள் கட்டணக்கணக்கீடு, பதிவுக்கு முந்தைய தரவு உள்ளீடுகள், பத்திரப்பதிவுக்கு நேரம் ஒதுக்க விண்ணப்பித்தல், சார்பதிவாளர் அலுவலகங்களின் முகவரி, திருமண அலுவலக முகவரி, பயிர்க்கடனுக்கான சான்றுகளை அளித்தல், இணையதளத்தில் மின்-முத்திரைத்தாள்களை தரவிறக்கம் செய்துகொள்ளுதல் போன்ற சேவைகளை பெறலாம். 
சொத்துக்களின்வழிகாட்டுதல் விலைகளை அறிவதற்காக மெளல்யா என்ற செல்லிடப்பேசி செயலியையும் அறிமுகம் செய்துள்ளோம் என்றார்.


"மின் வாகனங்களின் பயன்பாட்டை 50 சதவீதமாக அதிகரிக்க திட்டம்'
கர்நாடகத்தில் அரசு அலுவலகங்களில் மின் வாகனங்களின் பயன்பாட்டை 50 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு மின் வழங்கல் நிறுவனத்தின்(பெஸ்காம்) சார்பில் பெங்களூரு, விதான செளதாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மின் வாகனங்களுக்கான மின்னேற்று நிலையங்களைத் தொடக்கிவைத்து அவர் கூறியது: 
 மாநிலத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மாசு ஏற்படாமல் தடுக்க மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வாடகைக்கு கார் உள்ளிட்ட வாகனங்களை எடுக்கும்போது 50 சதவீத மின் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்படும். 
மேலும்,  அரசு அலுவலகங்களுக்கு புதிதாக வாங்கப்படும் வாகனங்கள் 50 சதவீதம் மின் வாகனங்களாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் வாகனங்களின் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசடைவது தடுக்கப்படுவதோடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்படும் நிதிச் சுமையையும் குறைக்க முடியும். எனவே, இனிமேல் மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
மின் வாகனங்களைக் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது குறித்தும் அரசு அதிகாரிகளோடு விவாதித்துள்ளேன். அதேபோல, தனியார் நிறுவனங்கள் மின்னேற்று நிலையங்களைத் தொடங்கவும் அனுமதி அளிக்கப்படும். பெஸ்காம் நிறுவனத்தால் பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள மின்னேற்று நிலையங்கள், தற்போதைக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க இருக்கிறது என்றார். 
இந்த விழாவில்,  எம்எல்ஏ ரோஷன்பெய்க், பெஸ்காம் மேலாண் இயக்குநர் சிகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பெங்களூரில் தற்போது 3 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள மின்னேற்று நிலையங்கள், வெகுவிரைவில் 11 ஆக உயர்த்தப்படும். இந்த நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.50-க்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com