பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பெங்களூரு தமிழ்ச் சங்கம்!

பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தல் மற்றும் செயல்பாடுகள் அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது.

பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தல் மற்றும் செயல்பாடுகள் அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது. சங்கப் பிரச்னைகளை சமரச முயற்சியின் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடக வாழ் தமிழர்களிடையே எழுந்துள்ளது.
பெங்களூரில் உள்ள தூய சூசையப்பர் கல்லூரி தமிழ் பேராசிரியர் தண்.கி.வெங்கடாசலம், டாஸ்கர் நகர் மாநகராட்சிப் பள்ளி தமிழாசிரிய பெருமக்கள் புலவர் க.சுப்பிரமணியன், புலவர் மா.சிவசங்கரன், கணக்காசிரியர் தி.ச.ஆறுமுகம், மருத்துவர் த.இராமன், வே.இரா.கோவிந்தராசன், அ.கிருட்டிணமூர்த்தி ஆகிய எழுவரும் கூடி 1950-ஆம் ஆண்டில் தமிழ்ப் படிப்புக் குழுவை அமைத்து, பின்னர் தமிழ்ச் சமூகத்தின் கலை, இலக்கிய, பண்பாட்டு அடையாளங்களை கட்டிக்காக்கும் நோக்கில் பெங்களூரு தமிழ்ச் சங்கம் என பெயர்மாற்றம் செய்தனர். 
10 ஆண்டுகாலம் திறம்பட செயல்பட்ட பெங்களூரு தமிழ்ச் சங்கம், 1960, ஜூன் 30-ஆம் தேதி சட்டப்படி பதிவுசெய்யப்பட்டு, தமிழ்மொழி, பண்பாடு ஆகியவற்றை வளர்ப்பதும், தமிழர் நலனை காப்பதும், தமிழுக்கும் கன்னடம் முதலான பிறமொழிகளுக்குமிடையே சீரான உறவை வளர்ப்பதும் சங்கத்தின் குறிக்கோள்களாக வகுக்கப்பட்டன. 
இந்த குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் எத்தகைய ஜாதி, நிற, மத வேறுபாடுகள் இன்றியும், எந்த அரசியல் சார்புமின்றியும் செயல்படும் என்று நோக்கக்குறிப்பு மற்றும் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் நோக்கங்களைச் செயல்படுத்துவதற்காக ஈராண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி ஆட்சிமன்றக்குழு மற்றும் செயற்குழுவை தேர்ந்தெடுப்பதுவழக்கம். 
அந்தவகையில், 2018-2020-ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் நவ.25-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நவ.5-ஆம் தேதி தொடங்கி, நவ.13-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், என்.சிவா உள்ளிட்டோர் அளித்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. 
இது கர்நாடகத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வுகான வேண்டுமென்ற எண்ணம் தமிழர்களிடையே பரவலாக காணப்படுகிறது. "எத்தனை குறைகள் இருந்தாலும், அதை தமிழ்ச்சங்கத்தின் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை நீதிமன்றம் வரை இழுத்தது சரியல்ல. எத்தனை கருத்துவேறுபாடுகள் இருந்தாலும்தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கர்நாடகத்தில் மொழிச் சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள், சமூக, பொருளாதார, கல்வி,அரசியல் நிலைகளில் பின் தங்கியுள்ள நிலையில், அதை சீர்செய்யும் பொறுப்பில் இருக்கும் பெங்களூரு தமிழ்ச் சங்கம் பலவீனப்பட்டு கிடப்பது, கர்நாடகத் தமிழர்களின் நலனுக்கு நல்லதல்ல. எனவே, நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்னையை தீர்த்துக்கொண்டு ஜனநாயகமுறையில் தேர்தலை நடத்தி, தகுதியானவர்களை ஆட்சிக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து சீரான நிர்வாகத்தை அளிக்க வேண்டும்' என்ற கருத்து தமிழர்களிடையே நிலவுகிறது. 
இந்நிலையில், வழக்குத் தொடுத்துள்ள அணியில் இடம்பெற்றுள்ளவரும், சங்கத்தின் துணைச் செயலாளர், தேர்தல் பொறுப்பாளர், காமராஜர் உயர்நிலைப் பள்ளி தாளாளராக பங்காற்றியவருமான புலவர் வி.மணிவண்ணன் கூறுகையில்,"25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெங்களூரு தமிழ்ச் சங்கம் அதன் நோக்கங்களுக்கு தகுந்தவாறு தமிழ்மொழி, கலை, பண்பாட்டைபாதுகாக்கும் அமைப்பாக செயல்பட்டுவந்தது. கடந்த 12 ஆண்டுகளாக இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டதோடு, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் ஜாதி அமைப்புகள், அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது. இது பெங்களூரு தமிழ்ச் சங்கம் மற்றும் கர்நாடகத்தமிழர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. தமிழர்களின் நலனுக்கான தொலைநோக்கு சிந்தனையில்லாத போக்கு நிர்வாகத்தில் காணப்படுகிறது. சங்கத்தின் நோக்கங்களும், விதிமுறைகளும் சீராக பின்பற்றப்படவில்லை. விதிமீறல்களை சுட்டிக்காட்டினால் எதிரிகளாக கருதும் போக்கு மேலோங்கியுள்ளது. சங்கத்தின் நோக்கங்கள், விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டால், அதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? 
கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் நலனை புறக்கணித்து, தன்னலமாக செயல்பட்டால் அதை எப்படி அனுமதிக்கமுடியும்? இந்தநிலை மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளில் கண்டிப்பாக மாற்றம் தேவைப்படுகிறது. எங்கள் மீது கோபப்படுவோர் அதை புரிந்துகொள்ள வேண்டும். சங்கத்தின் நோக்கங்கள், விதிமுறைகளை சரிவர அமல்படுத்த வேண்டும். மேலும்கணக்குகளை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்த வேண்டும். ஜாதி, அரசியல் ஆதிக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோளாகும். 
சங்கத்தின் பொறுப்பாளகள் மீது வெறுப்போ, பகைமை உணர்வோ, பழிவாங்கும் எண்ணமோ எங்களுக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. இந்தசூழலில், பெங்களூரு தமிழ்ச்சங்கம் மற்றும் கர்நாடகத் தமிழர்களின் பொதுநலனுக்காக எந்த தியாகத்துக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்து தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை சீர்த்திருத்தி, குறைகளை களைந்து தூய்மைப்படுத்துவதே எங்கள் எண்ணமாகும்' என்றார்.
சங்கத்தின் முன்னாள் பொருளாளர் இராதைமணாளன் கூறுகையில்,"பெங்களூரு தமிழ்ச்சங்கத்தை தொடங்கிய எழுவரின் நல்லநோக்கத்திற்கு இணங்க, கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சிக்குழு, செயற்குழுவில் இடம்பெற்றோர் சீரான, தூய்மையான, ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தை அளிக்க தவறிவிட்டனர். கர்நாடகத் தமிழர்களின் நலன்காக்கும் அமைப்பாக உள்ள சங்கத்தின் செயல்பாடுகள் தரமானதாக அமைந்திருக்க வேண்டும். ஜனநாயகத்தில் கேள்விக் கேட்பது இயல்பானதுதான். சங்கத்தின் செயல்பாடுகளில் காணப்படும் குறைகளைக் சுட்டிக்காட்டியபோதே அவற்றை சரிசெய்திருந்தால், வழக்குத் தொடுக்கும் நிலை வந்திருக்காது. சங்க நலனில் அக்கறை கொண்டோர் சிந்தித்து, இப்பிரச்னையை தீர்க்க முன்வந்தால், அதைமுழுமனதோடு ஏற்க காத்திருக்கிறோம்' என்றார்.
கர்நாடக உயர் நீதிமன்றம், மாவட்ட துணைப் பதிவாளரிடம் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுவதற்கும், நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்னைக்கு தீர்வு காணவும் தமிழர்நலனில் அக்கறைகொண்ட சான்றோர் பெருமக்கள் சமரச முயற்சிகளில் ஈடுபட்டால் நல்லது என்பதே பெங்களூரு தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மட்டுமல்லாது, கர்நாடகத் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com