தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் வேளாண் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பு: அமைச்சர் கிருஷ்ணபைரே கெளடா

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேளாண் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேளாண் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கெளடா தெரிவித்தார்.
பெங்களூரு, விதானசெளதாவில் சனிக்கிழமை மாவட்ட தோட்டக்கலை, வேளாண் துறை அதிகாரிகளுடன் வேளாண் துறை அமைச்சர் சிவசங்கர் ரெட்டி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கெளடா ஆகியோர் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினர்.
அப்போது, அமைச்சர் கிருஷ்ணபைரே கெளடா கூறியது: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, பட்டுத் துறைகளின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகளுக்கு சாதகமாக அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் லாபம் பெருக வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தின்கீழ் அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகளை கட்டிக்கொள்ளலாம். மாம்பழம், தேங்காய், மிளகு, பப்பாளி, திராட்சை, எலுமிச்சை, வாழை போன்ற 22 தோட்டக்கலை பயிர்களை விளைவிக்க விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கரில் பயிரிடுவதற்கு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.1.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து விவசாயிகள் மட்டுமல்லாது, அதிகாரிகளுக்கும் போதுமான தகவல் இல்லாததால், இதுபற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால் இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த இயலவில்லை. இந்த திட்டத்தில் பட்டு வளர்ப்புக்கும் வாய்ப்புள்ளது. இந்த தகவல்களை விவசாயிகளிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்றார் அவர்.
அமைச்சர் சிவசங்கர் ரெட்டி பேசுகையில், தேசிய வேலை உறுதி திட்டத்தில் கிடைக்கும் அனைத்து திட்டங்களையும் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை அதிகாரிகள் செய்ய வேண்டும். இந்த திட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார் அவர்.
அப்போது, வேளாண் துறை முதன்மைச் செயலர் மகேஷ்வர்ராவ், தோட்டக்கலைத் துறை முதன்மைச் செயலர் பி.சி.ராய், ஆணையர் கனகவள்ளி உள்ளிட்ட அதிகாரிகள்
உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com